jeevan-works-logo
booked.net
கட்சிக்குள் பரிமாறிய கடிதம் பொதுவெளியில் தெரிந்தது எப்படி? ராகுல் காந்தி செம்ம காட்டம்!!

Published: Tuesday, Aug 25,2020 ,07:30:36am

காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் வேண்டும் என்றும், தலைமை மாற்றம் தேவை என்றும் சில முக்கியத் தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியதை அடுத்து, காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக சோனியா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது.  இத்தகைய பரபரப்புகளுக்கு மத்தியில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நேற்று - ஆகஸ்ட் 24 நடைபெற்றது.

சோனியாவுக்கு எதிராக கடிதம் எழுதிய விவகாரத்தில் பாஜகவின் சதி இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியதாகவும், அது குறித்து காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்ததாகவும் கூறப்பட்டது.

தலைமை மாற்றம் வேண்டி காங்கிரஸ் தலைவர்கள் எழுதிய கடிதம், பொது வெளியில் வெளியானது எப்படி? என்று செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தின் துவக்கத்தில், தற்காலிக தலைவர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக, சோனியா அறிவித்தார். இது தொடர்பாக, கட்சியின் பொதுச் செயலர், கே.சி. வேணுகோபாலுக்கு விரிவான கடிதத்தை எழுதியுள்ளதாக குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து பேசிய, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், மூத்த தலைவர், ஏ.கே. அந்தோனி ஆகியோர், 'முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்' என, சோனியாவை வலியுறுத்தினர்.

மேலும், கட்சி மூத்த தலைவர்கள் எழுதியுள்ள கடிதத்துக்கு அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். 'காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறையை மேற்கொள்வோம். அதுவரை, சோனியா தலைமை பொறுப்பில் தொடர வேண்டும்.

இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில், டில்லியில் உள்ள கட்சி தலைமையகத்தின் வெளியே, நுாற்றுக்கணக்கான தொண்டர்கள் குழுமியிருந்தனர். 'நேரு, இந்திரா குடும்பத்தைச் சேர்ந்தவரே தலைவராக இருக்க வேண்டும். மற்றவர்களை ஏற்க முடியாது' என, அவர்கள் கோஷமிட்டனர். இதற்கிடையே, 'பா.ஜ.,வின் தூண்டுதலால், சில மூத்த தலைவர்கள் இவ்வாறு செயல்படுகின்றனர்' என, ராகுல் குற்றஞ்சாட்டினர். அதற்கு, கபில் சிபல், குலாம் நபி ஆசாத் மறுப்பு தெரிவித்தனர்.

வீடியோ செய்திகள்