சமீபத்தில் மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், ‘மாநிலத்துக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் போக்குவரத்தில் இடையூறு ஏற்படாத வகையில் இ-பாஸ் நடைமுறையை திரும்பப் பெற வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது. மறுநாளில் இருந்து இந்த உத்தரவை புதுச்சேரி அரசு அமல்படுத்தியது.
‘இ-பாஸ்’ நடைமுறையில் தளர்வு செய்ததால் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாகிவிட்டதா? என்பது பற்றி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய முடியுமா? என்பது பற்றி முடிவெடுக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் விரிவான ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இந்த ஆய்வு கூட்டம் 29-ந் தேதி (சனிக்கிழமை) காலையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு, தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடருமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்பது பற்றிய அறிவிப்பை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என்று தெரிகிறது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இ பாஸ் ரத்து செய்யப்படுவது, சுகாதாரத் துறைக்கு சவாலானது என கூறியுள்ளார்.
“பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு இ பாஸ் அனுமதியில்லாமல் வருவது சுகாதாரத் துறைக்கு சவாலானாது. இருப்பினும் முகக் கவசம் அணிதல், அரசு கூறும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்தல் ஆகியவை கொரோனா பரவலைத் தடுக்கும்” என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.