EMI மொராடோரியம் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்திடம் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கொரோனா காலகட்டத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட கடன் தவணை நீட்டிப்பு காலத்திற்கான வட்டி, வட்டி மீதான வட்டி ஆகியவற்றை தள்ளுபடி செய்வது குறித்து பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மொராடோரியம் காலத்தை இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு தழுவிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் வருமானம் இழக்கக்கூடிய சூழல் இருந்ததால், மார்ச் மாதம் முதல் மே 31ஆம் தேதி வரை கடன் தவணைகளை செலுத்த கூடுதல் கால அவகாசம் (EMI moratorium) வழங்கப்பட்டது. நேற்றுடன் இக்கால அவகாசம் முடிவுக்கு வந்துவிட்டது.
அது தொடர்பாக மத்திய அரசின் பதில் மனுவை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது, கடன் தவணை நீட்டிப்பு காலத்தை, மேலும் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்க இயலும் என அவர் கூறினார்.
கடன் தவணை நீட்டிப்பு காலத்திற்கான வட்டியை தள்ளுபடி செய்வது பற்றி பரிசீலிக்குமாறு ஏற்கனவே ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. வட்டி மீது விதிக்கப்படும் வட்டியை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
எனவே, EMI மொராடோரியம் மேற்கொண்டு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.