jeevan-works-logo
booked.net
தொடங்கியது மாவட்டங்களுக்கிடையிலான பேருந்து சேவை..!! இருவர் அமரும் சீட்டில் ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணம்!!

Published: Tuesday, Sep 08,2020 ,06:48:02am

கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர் கடந்த 1-ந் தேதி முதல் மாவட்டத்துக்குள் மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. பின்னர் இந்த மாதம் 7-ந் தேதி முதல் மாவட்டங்கள் இடையேயும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அரசு விரைவு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 4-ந் தேதி தொடங் கியது. அந்தந்த கோட்ட நிர்வாகங்கள் சார்பிலும் வெளியூர் பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. செல்போன் செயலி மூலமாகவும், ஆன்லைன் வழியாகவும் முன்பதிவு நடந்தது. பயணிகள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.

மாவட்டங்களுக்கு இடையேயான பஸ் சேவை நேற்று முதல் தொடங்கியது. வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் புறப்பட்டு சென்றன. உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பின்னரே பஸ் நிலையத்துக்குள் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். டிக்கெட் முன்பதிவு செய்திருந்த, முககவசம் அணிந்த பயணிகள் மட்டுமே உள்ளே சென்றனர்.

பஸ்சில் ஏறும் முன்பு மீண்டும் ஒருமுறை பயணிகளுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ கருவி மூலம் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. கைகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

44 பேர் அமரும் வசதி கொண்ட அரசு விரைவு பஸ்களில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 26 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இதேபோல் விழுப்புரம் உள்ளிட்ட அந்தந்த கோட்ட போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்பட்ட வெளியூர் பஸ்களிலும் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஒரு ‘சீட்’ இடைவெளியில் பயணிகள் அமர்ந்து இருந்தனர். அதாவது இரண்டு பேர் அமரும் இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணம் செய்தார்கள்.

வீடியோ செய்திகள்