jeevan-works-logo
booked.net
நடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம்!! பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு!!

Published: Tuesday, Sep 15,2020 ,07:01:59am

மருத்துவ படிப்பில் சேருவதற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள "நீட்" நுழைவுத் தேர்வை, கொரோனா காலத்தில் மாணவர்கள் எழுதவேண்டிய காட்டாயம் தொடர்பாக நடிகர் சூர்யா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட மாணவர்கள் தேர்வு எழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது. கொரோனா அச்சத்தால்‌ உயிருக்குப் பயந்து 'வீடியோ கான்பிரன்ஸிங்‌' மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌ தேர்வு எழுத வேண்டும்‌ என்று உத்தரவிடுகிறது என்று தனது ஆதங்கத்தைப் பதிவு செய்கிறது. 

சூர்யாவின் இந்த கருத்தை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி சுப்பிரமணியம், தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், சூர்யாவுக்கு ஆதரவாக ஓய்வு பெற்ற நீதிபதிகளான கே. சந்துரு, கே.எம். பாஷா, டி. சுதந்திரம், டி. ஹரிபரந்தாமன், கே. கண்ணன், ஜி.எம். அக்பர் அலி ஆகியோர் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில், நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் கல்விக்கு உதவியுள்ளார். அவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்பை பெற்றுள்ள நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டுவிடலாம். தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். 

ஆனால், சூர்யாவின் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் நீதித்துறை செயல்பாட்டை குறைத்து மதிப்பிடும் வகையிலும் உள்ளது என்று தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ். பிரபாகரன் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வீடியோ செய்திகள்