jeevan-works-logo
booked.net
படுத்த படுக்கையாக வந்து சரணடைந்த சரவணபவன் ராஜகோபால். போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்கு ஏற்பாடு.

Published: Wednesday, Jul 10,2019 ,12:34:15pm

சுப்ரீம் கோர்ட்டில் சரணடைவதற்கு காலஅவகாசம் வேண்டி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி ஆனதால் ஓட்டல் அதிபர் ராஜகோபால் ஸ்ட்ரெச்சரில் வந்து கோர்ட்டில் சரணடைந்தார். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  தொடர்ந்து மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால் போலீஸ் பாதுகாப்போடு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

நேற்று ராஜகோபால்,  கோர்ட்டுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டார்.  அவரது வக்கீல்கள் நீதிபதி முன்பு ஆஜராகி ராஜகோபால் சரணடைய விரும்புவதாகவும் அவரை மூன்றாவது மாடிக்கு அழைத்து வருவதில் சிக்கல் இருப்பதால் அவரது சரண்டர் மனுவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.  இதற்கு ஆட்சேபம் தெரிவித்த நீதிபதி ராஜகோபால்  மூன்றாவது மாடியில் வந்து சரணடைய உத்தரவிட்டார். 

 அவரின் உறவினர்கள் பணியாளர்கள் ஆகியோர் சேர்ந்து ராஜகோபாலை ஸ்ட்ரெச்சர் உடன் படிக்கட்டு வழியாக தூக்கி சென்றனர்.  அப்போது வலிக்கிறது என்று ராஜகோபால் சத்தமிட்டபடி வந்தார். ராஜகோபாலை விசாரித்த நீதிபதி அவரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். பிறகு,  ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராஜகோபால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டார். தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப் படுவதால்,  புழல் சிறையில் சிறப்பு வார்டில் வைத்து ராஜகோபாலுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செய்தி வரலாறு...:

சைவ ஹோட்டல் துறையில் கொடிகட்டி பறந்த சரவணபவன் சாம்ராஜ்ய உரிமையாளர் ராஜகோபால் தன்னிடம் பணியாற்றிய ஊழியரின் மகளான ஜீவஜோதியை அடைய நினைத்தார். சிவ ஜோதியை திருமணம் செய்து கொண்டால்  வாழ்வில் இன்னும் மேன்மை அடையலாம் என்று ஜோதிடர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதன் பொருட்டு, ஜீவஜோதியின் கணவர், பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படை வைத்து கொலை செய்தார், ராஜகோபால். 

2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ம் தேதி,  தன் கணவரை காணவில்லை என்று ஜீவஜோதி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.  இதில் ராஜகோபால் தரப்பு மீது சந்தேகம் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். விசாரணையை தொடங்கிய காவல்துறை கொடைக்கானல் மலைச்சரிவில் சாந்த குமாரின் உடலை கைப்பற்றியது. 

 இக்கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு,  ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 55 லட்சம் ரூபாய் அபராதமும்  விதிக்கப்பட்டது. மீதமுள்ள 8 பேருக்கு ஏழில் இருந்து 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

 இதை எதிர்த்து  ராஜகோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  வழக்கை விசாரித்த நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அதிரடியாக தீர்ப்பளித்தது. 

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில்  சரவண பவன் அதிபர் ராஜகோபால் மற்றும் 9 பேரில்,  ராஜகோபாலை தவிர மற்ற அனைவரும் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். 

நரம்பு மண்டலம் நோயால் பாதிக்கப்பட்டதால் தற்போது சரண் அடைய இயலவில்லை என ராஜகோபால் தரப்பிலிருந்து மனு தாக்கல் செய்யப்பட்டது. 

பெண் ஆசையோ  அல்லது ஜோதிடத்தால் எழுந்த மூடநம்பிக்கையோ,  அறம் தவறி நடப்போற்கு அறமே கூற்றாகும்.

வீடியோ செய்திகள்