150 கோடி ரூபாய் செலவில் வேதாரண்யம் வட்டம் ஆறுகாட்டுத்துறையில் புதிய மீன்பிடி துறைமுகம் மற்றும் விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 235 கோடி ரூபாயில் புதிதாக மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படும் என்றும் பெண்களுக்கு தலா 10 ஆடுகள் 90 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்தார்.
கிராமங்களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் மன வளத்தை மேம்படுத்தவும் குழு மனப்பான்மையை உருவாக்கும் இளைஞர்களை விளையாட்டு துறையில் ஊக்குவிக்கவும் 12,524 ஊராட்சிகளில் மற்றும் 528 பேரூராட்சிகளில் 64 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் ” அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்” என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
விழுப்புரம் மாவட்டம் அழகன் கோபம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் ஆலம்பரை குப்பம் கழிவேளியில் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் மீன்பிடி துறைமுகங்கள் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இந்த மீன்பிடி துறைமுகங்களில், 250 இயந்திரப் படகு, 1100 மோட்டார் ஃபைபர் படகுகளும் நிறுத்த முடியும்.
இதனால் சென்னை மற்றும் கடலூரில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நெருக்கடி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களான, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை, கொடிய காடு மற்றும் மணியன் தீவு ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகம் இல்லாத காரணத்தினால் 150 கோடி ரூபாய் செலவில் ஒரு புதிய மீன்பிடி துறைமுகம் ஆறுகாட்டுத்துறையில் அமைக்கப்படும். நூறு விசைப்படகுகள் மற்றும் 500 பைபர் படகுகள் நிறுத்துவதற்கு வசதியாக இது அமையும்.
தமிழ்நாட்டில் உள்ள 20 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் உள்ள பெண்களுக்கு 90 சதவீத மானியத்தில் ஒருவருக்கு தலா 10 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் மற்றும் ஒரு வெள்ளாடு அல்லது செம்மறியாட்டுக்கடா வீதம் வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டும் அரசு செயல்படுத்த உள்ளது.