jeevan-works-logo
booked.net
அவமானம்.! அவமானம்…!! முதலமைச்சர் எங்களை கொச்சைப் படுத்தி விட்டார்… திமுக வெளிநடப்பு.

Published: Monday, Jul 15,2019 ,03:49:55pm

தபால் துறை போட்டித் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு தேர்வுகள்  ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே எழுதப்பட வேண்டும் என்ற விவகாரம் குறித்து  பேரவையில் திமுக உறுப்பினர் தங்கம்தென்னரசு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து  பேசினார். 

 தமிழர்கள் மத்திய அரசு பணியில் சேர்ந்துவிடக் கூடாது என்று  மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.  தபால் துறை போட்டி தேர்வை தமிழ் மொழியிலும் எழுத தமிழக அரசு மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.  இது தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் தங்கம்தென்னரசு குறிப்பிட்டார். 

 இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார்,  தபால் துறையை தேர்வில் தாள் ஒன்றில் மட்டுமே தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக,  தாள் இரண்டில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், தமிழ் இருமொழிக்  கொள்கையையே பின்பற்றுவதாகவும் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசை நிச்சயம் வலியுறுத்துவோம்  என்றும் கூறினார். 

 பிறகு பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன்,  தமிழக அரசு இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருக்குமாயின்,  மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றுமா என்று கேள்வி எழுப்பினார். 

 இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் திமுகவும் அதிமுகவும் சேர்ந்து குரல் எழுப்புவோம்,  தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவோம் என்று கூறினார். 

 இதற்கு மறுமொழி அளித்த துரைமுருகன்,  நமது எம்பிக்கள் நிச்சயம் குரல் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை,  தமிழக அரசு மத்திய அரசை கண்டித்து ஏன் தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று கேட்டார்.  அப்போது குறுக்கிட்டுப் பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ் இந்த பிரச்சினை குறித்து நாளை நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் கேள்வி எழுப்ப இருக்கிறார்கள் என்ற தகவல் அளித்தார். 

 இதற்கு மத்திய அரசு கொடுக்கும் பொழுது நாம் முடிவெடுப்போம் எனவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.  இதன் பிறகு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், திமுக இந்த விவகாரத்தில் வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு பேசி வருவதாகவும், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளிக்கும் பதிலைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் கூறினார். 

 இதற்கு பதிலளித்த துரைமுருகன்,  தங்கள் உண்மையான உணர்வோடு இந்த விவகாரம் குறித்து பேசி வருவதாகவும்,  ஆனால் திமுகவை கொச்சைப்படுத்தும் வகையில் முதலமைச்சர் பேசியதால், அதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறினார். 

இதைத் தொடர்ந்து மீண்டும் பேசிய முதலமைச்சர்,  வெளிநடப்பு செய்ய காரணத்தை தேடித்தேடி பார்த்ததாகவும், எதுவும் கிடைக்காததால் இந்த விவகாரத்தை ஒரு சாக்காகக் கொண்டு வெளிநடப்பு செய்துள்ளதாகவும் கூறி முடித்தார். 

 திமுகவை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர்.  இறுதியாக பேசிய அமைச்சர் சிவி சண்முகம் மத்திய அரசின் பதிலைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை தீர்மானிக்கப்படும் என்று சொல்லப்பட்டதே தவிர மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வே மாட்டோம் என்று எந்த இடத்திலும் நாங்கள் சொல்லவில்லை என்று தெரிவித்தார்.  ஏதாவது செய்து மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே பிரச்சினை உருவாக்கி அதில் குளிர்காய திமுக நினைப்பதாகவும் அது ஒருபோதும் நடக்காது என்றும் சிவி சண்முகம் கூறினார்.

வீடியோ செய்திகள்