jeevan-works-logo
booked.net
எச் ஐ வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்மணிக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், ரத்ததானம் தொடர்பாக வல்லுநர் குழுவை உருவாக்கவும் அரசுக்கு உத்தரவு.

Published: Saturday, Jul 27,2019 ,09:08:26am

  சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில்  பரிசோதிக்காத ரத்தம் செலுத்தப்பட்டதால், அவர் எச்ஐவி தொற்றுக்கு ஆளானார். சில தினங்களுக்கு பிறகு ரத்தம் தானம் செய்த நபர்   தற்கொலை செய்து கொண்டார். ரத்த தானம் செய்த நபர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்தவர். கூலி வேலை செய்து வந்த அவர் ரத்த தானம் கொடுப்பதை வழக்கமாக செய்து வந்துள்ளார். 

 வெளிநாடு செல்வதற்காக ரத்த பரிசோதனை செய்து கொண்டபோது தனக்கு எச்ஐவி நோய் இருப்பதை கண்டறிந்து,  சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று, தனக்கு எச்ஐவி இருப்பதாகவும் தான் இங்கு ரத்த தானம் செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.  அதன் பிறகே அவரது ரத்தம் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அந்த வாலிபர் தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,  சிகிச்சைக்கு உடன்படாமல் மரணத்தை தழுவினார். 

இது தொடர்பாக தொடரப்பட்ட இரண்டு பொதுநல வழக்கு களில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கினர்.  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்குதல், தானமாக வழங்கப்படும் ரத்தத்தை முறையாக பரிசோதித்தல்,  ரத்த மாற்று சிகிச்சையை பாதுகாப்பாக மேற்கொள்ள அரசு மருத்துவமனையில் வசதிகள் உண்டாக்குதல் மற்றும் ரத்த தானம் தொடர்பான பொது விதிகளை உருவாக்கி உள்ளிட்ட கோரிக்கைகளை உள்ளடக்கியது இவ்வழக்குகள். 

இது தொடர்பான தீர்ப்பில்,  பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும்,  பத்து லட்ச ரூபாயை பெண்ணின் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்யவும்,  15 லட்சம் ரூபாயை அவரது இரு குழந்தைகள் பெயரிலும் டெபாசிட் செய்யவும் நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். 

 குழந்தைகள்  பெயரில் செய்யப்படும் தொகை அவர்கள் மேஜர் ஆன பின்பு எடுக்க இயலும் வகையில் செய்யப்பட வேண்டும் என்றும்,  இந்த குடும்பத்திற்கு 450 சதுர அடிக்கு குறையாத இரு படுக்கை அறை கொண்ட வீடு ஒன்றைக் கட்டித் தரவேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

 இரத்த வங்கிகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும்,  ஆய்வாளர்கள், ரத்தம் தொழில்நுட்ப பணியாளர்கள்,  செவிலியர்கள் போன்ற பணியிடங்களை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழக நிபந்தனைகள் அடிப்படையில் நிரப்ப வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை ஜனவரி 11ஆம் தேதி தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

 நம்மில் பலரும் ரத்த தானம் செய்பவர்கள் தான்.  தானம் செய்யப்பட்ட ரத்தம், எச் ஐ வி மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்  கிருமிகள் இருக்கின்றனவா என்று பரிசோதிக்கப்பட்ட பின்பே பயன்படுத்தப்படுகின்றது என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ரத்ததானம் தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை நீதிமன்றம் வழங்கியிருப்பது,  அரசு இதுவரை கடைபிடித்த நெறிமுறைகள் என்ன என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. 

 மனசாட்சிக்கு பயந்து,  தாமாக முன் வந்து தனக்கு எச் ஐ வி இருப்பதை  தெரிவித்து, தனது ரத்தத்தால் ஒரு கர்ப்பிணிப் பெண் பாதிக்கப்பட்டதை அறிந்து  தற்கொலை செய்துகொண்ட அந்த கூலித்தொழிலாளி நிச்சயம் நினைவுகூறத் தக்கவர். 

வீடியோ செய்திகள்