jeevan-works-logo
booked.net
வடபழனி பேருந்து நிலைய பணிமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இரண்டு பேர் உயிரிழப்பு 5 பேர் படுகாயம்.

Published: Monday, Jul 29,2019 ,10:08:22am

 நேற்று நள்ளிரவு பணி முடிந்து வடபழனி அரசு போக்குவரத்து பணிமனை திரும்பிய அரசு பேருந்து,  கட்டுப்பாட்டை இழந்து பணிமனையின் சுற்று சுவர் மீது மோதியது. இதில் பணிகளை முடித்துவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பணிமனை ஊழியர்கள் 7 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சேகர்,  பாரதி என்ற இரண்டு பணியாளர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த மற்ற ஐந்து பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 விபத்து நடந்த இடத்தை போக்குவரத்து பணிமனை அதிகாரி கணேசன் ஆய்வு செய்தார்.  போக்குவரத்து துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் காயமடைந்த பணியாளர்களை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். 

இதனிடையே,  உயிரிழந்த பணியாளர்களது குடும்பத்தினருக்கு  நிதி அளிக்கவும், பனிமலையில் ஊழியர்களுக்கு என்று ஓய்வறை கட்டித்தர வலியுறுத்தியும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குனர் இளங்கோவன் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.  அதன் பின்னரே பேருந்துகள் இயக்கப்பட்டன. உயிரிழந்த பணியாளர்களுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. 

 விபத்து குறித்து பேசிய போக்குவரத்து துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,  பேருந்தில் பிரேக் உள்ளிட்ட பிரச்சினைகள் இல்லை என்றும், பேருந்தை இயக்கிய ஓட்டுனரும் அனுபவம் வாய்ந்தவர் தான் என்றும் தெரிவித்தார்.   இறந்த ஊழியர்களுக்கு போக்குவரத்து துறை சார்பில் வழங்கப்படும் நிதியோடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று கூடுதல் நிதியையும் பெற்றுத் தருவதாக அவர் வாக்குறுதி அளித்தார். 

 விபத்துக்கு காரணமான ஓட்டுனர் பாலமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.  பொது இடத்தில் வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுதல், அஜாக்ரதையாக செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்துதல்,  தனிநபர்களுக்கு காயம் ஏற்படுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீடியோ செய்திகள்