jeevan-works-logo
booked.net
கோயம்புத்தூர் வங்கி ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி. வாடிக்கையாளரே கண்டுபிடித்தார்…!

Published: Monday, Jul 29,2019 ,10:57:32am

கோவை,  சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவர் தனது  வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்காக   சூலூரை அடுத்த பாப்பம்பட்டி பிரிவில் உள்ள கனரா வங்கி ஏடிஎம் முக்கு சென்றுள்ளார்.

 அவர் தனது காரை ஏடிஎம் மிஷினில் செலுத்தி பணம் எடுக்க முற்பட்டபோது,  கார்ட் ஏடிஎம்மில் சிக்கிக் கொண்டிருக்கிறது. சிக்கிக் கொண்ட கார்டை மீட்டெடுக்க நந்தகுமார் முயலும்போது,  கார்டுடன் சேர்ந்து ஏடிஎம்மில் பொருத்தப்பட்டிருந்த ஸ்கிம்மர் கருவியும் கையோடு வந்துவிட்டது. 

 இதை தொடர்ந்து  நந்தகுமார், ஏடிஎம் மிஷினை பரிசோதித்தபோது,  அதில் கேமராவுடன் கூடிய ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.  இதுகுறித்து வங்கி மேலாளருக்கும், காவல் துறையினருக்கும் அவர் தகவல் தெரிவித்தார்.  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஸ்கிம்மர் கருவி என்றால் என்ன..?

ஸ்கிம்மர் கருவி என்பது வங்கி வாடிக்கையாளர்களது தகவல்களைக் கொண்டு  அவர்களுக்கே தெரியாமல் அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க சமூக விரோதிகளால் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். 

 ஸ்கிம்மர் கருவி இரண்டு பாகங்களை கொண்டது.  ஒன்று, நீங்கள் செலுத்தும் காட்டிலுள்ள விவரங்களை சேகரிப்பது.  இது, ஏடிஎம்மில் கார்டு செலுத்தும் இடத்திலேயே பொருத்தப்பட்டிருக்கும்.  இன்னொரு பாகம் கேமரா. இது, பின் நம்பர் உள்ளிட பயன்படும் நம்பர் பேட் மேலே பொருத்தப்பட்டிருக்கும்.  நீங்கள், காரை செலுத்தி பின் நம்பரை உள்ளிடும்போது, கார்டு விவரங்களும், உங்கள் பின் நம்பரும் இந்த கருவியால்  பதிவு செய்து கொள்ளப்படும். பிறகு இரண்டு தகவல்களையும் பயன்படுத்தி, போலி கார்டுகள் தயார் செய்யப்பட்டு உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும். 

ஸ்கிம்மர்  கருவிகளில் இருந்து எப்படி தப்பிப்பது?

ஏடிஎம் மிஷினில் கார்டை  உள்ளே செலுத்தி முன்பாக, கார்டு செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருக்கும் பகுதியை  கைகளால் இழுத்து பார்ப்பது நல்லது. இந்த ஸ்கிம்மர் கருவிகள் பெரும்பாலும் ஏடிஎம் மிஷின் இருக்கும் அதே நிறத்தில்தான் இருக்கும். பார்த்து கண்டறிவது கடினம்.  அதேபோல், பின் நம்பர் உள்ளிடும்போது கைகளால் மறைத்துக் கொண்டு எண்களை உள்ளிடுவது நல்லது. பெரும்பாலும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் உள்ள ஏடிஎம்மையே பயன்படுத்துங்கள்.

வீடியோ செய்திகள்