jeevan-works-logo
booked.net
ஆணவக் கொலைகள் தடுப்பு நடவடிக்கை. தமிழக அரசுமீது உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி..

Published: Tuesday, Jul 30,2019 ,09:28:59am

ஆணவ கொலைகள் தொடர்பான பத்திரிக்கைச் செய்திகளை கொண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் ஆகியோரைக் கொண்ட அமர்வு தாமாக முன் வந்து வழக்கை விசாரித்தது. இவ்வழக்கு விசாரணையின் கீழ்,   ஆணவக் கொலைகளை தடுப்பதற்காக உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளைப் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,  தமிழக அரசு தாக்கல் செய்திருந்த அறிக்கையில், ஆணவக் கொலைகள் பற்றிய வழக்குகளை விசாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் அனைத்திலும் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,  சமூக நலத்துறையின் கீழ் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை ஆராய்ந்த நீதிபதிகள் தங்களது அதிருப்தியை வெளியிட்டனர்.  தமிழகம் முழுவதும் 1300 காவல் நிலையங்கள் இருப்பதாகவும், இவை அனைத்திலும் சிறப்பு பிரிவு அமைப்பது  நடைமுறை சாத்தியம் இல்லாதது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

 ஆணவக் கொலைகளின்  கொடுமை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு துண்டு பிரசுரம் கூட அரசு சார்பில்  வெளியிடப்படவில்லை என நீதிபதிகள் குற்றம் சாட்டினார். இந்த அறிக்கையை தாக்கல் செய்த உதவி காவல்துறை ஆணையரை நாளை நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

ஹெல்மெட் அணிய சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த போராடும் அரசாங்கம்  பல பேரின் உயிரைக் குடித்த, இன்னும் குடிக்க காத்திருக்கும் ஆணவக்கொலை சம்பவங்களை தடுக்க இன்னும் கொஞ்சம் இறங்கி போராடலாம்.

வீடியோ செய்திகள்