கரோனா ஒரு பக்கம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், எந்த ஆண்டும் இல்லாத புது பிரச்சனையாக வெட்டுக்கிளி கூட்டம் உருவெடுத்திருக்கிறது.
சோமாலியா, பாகிஸ்தான், போன்ற நாடுகளிலிருந்து லோகஸ்ட் ரக வெட்டுக்கிளிகள் இந்தியா நோக்கி விரைவில் படையெடுத்து வரும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது. அது இப்பொழுது நடந்தேறியிருக்கிறது.
ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் அட்டகாசம் தொடங்கியிருக்கிறது. இது மற்ற மாநிலங்களுக்கும் பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா விவகாரத்தில் அரசாங்கம் தும்பை விட்டு வாலை பிடித்ததுபோல் இந்த வெட்டுக்கிளி விவகாரத்திலும் நடக்குமா என்று தெரியவில்லை.
இந்த லோகஸ்ட் ரக வெட்டுக்கிளிகள் லட்சக்கணக்கில் கூட்டம் கூட்டமாக ஒரு படையெடுப்பு போல் வந்து பயிர்களை நாசம் செய்யக் கூடியவை. நமக்கெல்லாம் எங்கே வரப்போகிறது என்று இறுமாந்து இருப்போமேயானால் வந்த பிறகு வருந்த வேண்டியது தான்.
ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட இந்த வெட்டுக்கிளிகள் மிகவும் ஆபத்தானவை. ஆறு மாதங்கள் வரை உயிர்வாழும் இந்த பூச்சிகள் ஒரு பகுதியை தாக்கத் தொடங்கினாள் அங்கு உணவு பஞ்சம் ஏற்படுவது உறுதி. கண்டம் விட்டு கண்டம் பறக்கக் கூடிய சக்தி கொண்ட இந்த வெட்டுக்கிளிகள் பல ஆண்டுகள் இந்திய பாகிஸ்தான் எல்லையை நோக்கி வந்திருக்கின்றன. ஆயினும் இந்தியாவிற்குள் இதுவரை நுழைந்தது இல்லை.
ஆப்பிரிக்க நாடுகளிலும் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த வெட்டுக்கிளிகளின் தாக்கம் இந்த ஆண்டு இருக்கிறது. பூச்சியியல் வல்லுநர் கள், மற்றும் இத்துறையின் அறிஞர்களைக் கொண்டு இப்பூச்சி தாக்குதல்களை மற்ற நாடுகள் எவ்வாறு எதிர்கொண்டன என்பதை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கங்கள் எடுக்க வேண்டும். வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தால் இழப்பு சாமானிய மக்களுக்கே.
உணவு பஞ்சம் ஏற்பட்டால், உணவை எங்கிருந்தேனும் அரசாங்கம் இறக்குமதி செய்யும். அதை இந்த வியாபாரிகளும் அதிக விலைக்கு விற்பார்கள். காசுள்ள கூட்டம் அதை வாங்கி உண்டு உயிர் பிழைக்கும். வழக்கம்போல் சாவது சாமானியர்கள் ஆக இருக்கும்.