jeevan-works-logo
booked.net
கல்வி கட்டணத்தை குறைக்க இயலாது..!! தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முடிவு..!!

Published: Saturday, Jun 27,2020 ,07:01:12am

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,  மக்கள்  தங்கள் பணிகளைச் செய்ய இயலாமல் வீடுகளுக்குள்  முடங்கி வருகின்றனர்.  நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள்  முற்றிலுமாக வருமானமின்றி  தவித்து வருகின்றனர்.  இந்நிலையில் நோய் தொற்றைத் தவிர்க்கும் பொருட்டு பள்ளிகள் முழுமையாக மூடப்பட்டிருக்கின்றன. வருமான இழப்பு மற்றும்,  மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல இயலாத நிலை காரணமாக  இந்த கல்விக்  கட்டணங்கள் குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்களுக்கு இருந்தது.

தற்போதைய சூழலில் கல்வி கட்டணத்தை குறைக்க இயலாது என தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் நடத்திய ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சென்னை, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய நகரங்களை சேர்ந்த முன்னணி தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினர்.

 அக்டோபர் மாதம் மழைக்காலம் என்பதால் அப்போது பள்ளிகளை திறந்தால் நோய் பரவல் கை மீறிச் சென்று விடும் என்றும், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை டிசம்பர் மாதத்திற்கு முன்பு பள்ளிகளுக்கு வரவழைப்பதும் சமூக இடைவெளியை பின்பற்றுவதும் கடினம் என்றும் அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப பாடத்திட்டங்களை குறைக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. நாடு முழுவதும் 30 சதவீத மாணவர்கள் மட்டுமே ஆன்லைன் வசதி வரக்கூடிய நிலை உள்ளதால், பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பது, சுழற்சி முறையில் மாணவர்களை வகுப்பிற்கு வரவழைப்பது, வீடுகளில் இருந்துகொண்டே பெற்றோர் உதவியுடன் பாடங்களை கற்பது போன்ற வழிமுறைகளை பின்பற்றலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.  80 சதவிகித மாணவர்கள் செலுத்தும் கட்டணங்கள் ஆசிரியர்களின் ஊதியத்திற்கே செலவாவதால் இப்போதைய நிலையில் கல்வி கட்டணத்தை குறைத்து சாத்தியமில்லை என்றும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

தனியார் பள்ளிகளின் இந்த முடிவு குறித்து அரசின் நிலையை அறிய மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். 

வீடியோ செய்திகள்