jeevan-works-logo
booked.net
சேல்ஸ் டார்கெட் வைத்து வேலை பார்த்த போலி இ பாஸ் விற்பனையாளர்கள். அரசு ஊழியர்களின் அட்டூழியம்..

Published: Saturday, Jun 27,2020 ,09:17:44am

எரிகிற வீட்டில் பிடுங்குவது வரை லாபம் என்பது போல  கொரோனா பரவலால் பல தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில்,  பாதிக்கப்பட்ட மக்களை வைத்து  எவ்வளவு பணம் பண்ண முடியும்  என்று அலையும் கூட்டமும் இருந்து வருகிறது.  இத்தகைய  கும்பல்  எல்லா துறைகளிலும் உள்ளது. அப்படிப்பட்ட ஒன்றுதான்  இந்த போலி இ பாஸ் விற்பனை கும்பலாகும். 

நாளொன்றுக்கு 100 போலி இ பாஸ்  விற்பனை செய்வது என இலக்கு வைத்து கடந்த ஒன்றரை மாதங்களாக இரண்டு அரசு ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 தமிழகத்திலிருந்து வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்பவர்களுக்கு இ பாஸ் வழங்கப்படுகிறது.  ஒரு சிலருக்கு உரிய காரணங்கள் இல்லாததால் நிராகரிக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக மற்றும் வருவாய் அலுவலகத்தில் பணியாற்றிய இளநிலை உதவியாளர்கள் இரண்டு பேர் கூட்டு சேர்ந்து போலி இ பாஸ்களை தலா 2,000 ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது.

 அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நாளொன்றுக்கு 100 போலி இ பாஸ்களை விற்பனை செய்வது என இலக்கு வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களாக இந்த மோசடி நடைபெற்று வருவதால், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிசார் விரிவான விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த பணியாளர்களை சுழற்சி முறையில் பணி அமர்த்தாமல், தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல், ஒரே இடத்தில் பணியாற்ற வைத்ததே, முறைகேடு நடக்க காரணம் என, கலெக்டர் அலுவலக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.  கலெக்டர் அலுவலக அலுவலர்கள் பலர், இதற்கு புரோக்கர்கள் வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வீடியோ செய்திகள்