jeevan-works-logo
booked.net
தமிழகத்திற்கான பாரத் நெட் டெண்டர் ரத்து. 12,000 கிராமங்கள் பயனடைந்திருக்கும்... எல்லாம் போச்சா..

Published: Sunday, Jun 28,2020 ,11:09:33am

மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தின் கீழ் தமிழக அரசு மேற்கொள்ள இருந்த 2000 கோடி ரூபாய் பணிகளுக்கான டெண்டரை முறைகேடு புகார் காரணமாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.

 மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் என்ற நிறுவனம் மூலம் நாடு முழுவதும் இரண்டரை லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணைய சேவை வழங்கும் உலகின் மிகப்பெரிய பாரத் நெட் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் சுமார் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கும், தமிழகத்தில் 12,524 கிராமங்களுக்கு அதிவேக இணைய சேவை வழங்கிட பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. சுமார் 6.25 லட்சம் கிராமங்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

 அதன்படி தமிழக தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது.

இத்திட்டத்திற்காக, தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன் நிறுவனம் 2019-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி அன்று வலைத்தளம் மூலமாக ஒப்பந்தப்புள்ளி கோரியது. இத்திட்டத்தின் மதிப்பீடு ரூ.1,950 கோடி என நிர்ணயிக்கப்பட்டது.  

 பெரிய நிறுவனங்கள் மட்டுமே டெண்டரில் பங்கு பெறும் படி அந்த நிறுவனங்களுக்கு ஆதரவாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் திடீரென நிறுவன தகுதிகளை மாற்றி அமைத்ததாக அறப்போர் இயக்கம், தேஜாஸ் நெட்வொர்க் என்ற தனியார் நிறுவனம், டிசிஇபி என்ற மத்திய அரசு நிறுவனம் ஆகியவை புகார் அளித்தனர்.

இதையடுத்து கடந்த மே மாதம் தமிழகத்தில் பாரத நெட் பணிகளை முற்றிலும் நிறுத்தி வைக்க மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது. டெண்டர் எடுக்கும் நிறுவனங்களின் தகுதிகளை திடீரென மாற்றியமைத்தது பாரபட்சம் காட்டும் வகையில் உள்ளதாக கூறியுள்ள மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம், திடீரென தகுதி மாற்றி அமைக்கப்பட்டதால் குறிப்பிட்ட நிறுவனங்கள் டெண்டரில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது அறிய முடிவதாக குறிப்பிட்டுள்ளது.  

இந்த திட்டத்தில் கருவிகள் கொள்முதலுக்கு டெண்டர் விடப்பட்டதில் விதிகள் மீறப்பட்டதாகவும், கருவிகளுக்கான டெண்டரில் உள்ள குறைகளை களைந்து மறு டெண்டர் விடுமாறும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வீடியோ செய்திகள்