jeevan-works-logo
booked.net
சாத்தான்குளம் விவகாரம்; இதுவரை அரசின் நடவடிக்கைகள் என்ன..?

Published: Monday, Jun 29,2020 ,06:11:31am

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இருவரது மரணத்திற்கு நீதி கேட்டு குரல்கள் நாடெங்கும் ஓங்கி ஒலிக்கின்றன. இந்நிலையில் இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமான சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தந்தை மகன் இருவரும் இறக்கவில்லை நலமாக இருக்கிறார்கள். அதற்கு நான் பொறுப்பு என்று ஆய்வாளர் ஸ்ரீதர் மருத்துவமனை வாசலில் பொதுமக்களிடம் கூறும் வீடியோ இப்போது வைரல் ஆகிவரும் நிலையில், இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை முக்கியத்துவம் பெருகிறது. 

 இதுவரை காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரவிகணேஷ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதையடுத்து சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக பெர்னாட் சேவியரை நியமித்து நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவீன் குமார் அபிமன்யு உத்தரவிட்டுள்ளார். பெர்னாட் சேவியர் வடசேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தவர். திங்கட்கிழமை பொறுப்பேற்க உள்ள அவர் நல்லபடியாக செயல்படுவேன் எனக் கூறியுள்ளார்.

 இதனிடையே தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாவட்ட நீதிபதி ஹேமா, கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். சனிக்கிழமை கோவில்பட்டி சிறையில் கைதிகள், சிறை காவலர்கள், உதவி கண்காணிப்பாளர், என தனித்தனியே விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றது.

ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் எத்தனை மணிக்கு அழைத்து வரப்பட்டனர், யார் விசாரணை நடத்தியது என நீதிபதிகள் நீண்டநேரம் விசாரணை மேற்கொண்டனர். 

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி ஆய்வாளர்களுக்கு பதிலாக இரண்டு உதவி ஆய்வாளர்களை நியமித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

 புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் முத்துமாரி மற்றும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிமாறன் இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு பணியிடமாற்றம் செய்து தூத்துக்குடி எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

 சாத்தான்குளத்தில் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். நேற்று பேட்டி அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள், இது லாக்கப் மரணம் கிடையாது என்று பேட்டி அளித்திருந்தது நினைவிருக்கலாம். 

 

வீடியோ செய்திகள்