jeevan-works-logo
booked.net
மூன்று நாளில் குறையுமென்றார்; பணக்காரர்களுக்குத்தான் கொரோனா வருமென்றார்; இப்போது ஆண்டவனுக்கே வெளிச்சம் எங்கிறார்::: முதல்வர் மீது ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு..

Published: Monday, Jun 29,2020 ,07:39:19am

எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் எந்த ஆலோசனையாவது வழங்கி இருக்கிறாரா என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார். நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் ஆற்றிய உரையில் முதலமைச்சரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.  மக்களை காக்க நூற்றுக்கணக்கான ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும், அவற்றை முதல்வர் ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 

 மக்கள் பிரதிநிதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட சட்டமன்ற கூட்டத்தை ஒத்திவைக்க கூறியதாகவும், ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி கொரோனா சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் மற்றும் பரிசோதனைகளை அதிகரியுங்கள் என்றும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு 5 ஆயிரம் ரூபாயும், பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களைக் காப்பாற்ற ஆலோசனைகளையும் வழங்கியதாக தெரிவித்தார். 

 மதுபான கடைகளை திறக்காதீர்கள் என்றும்,  பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்த வேண்டாம் என்றும் ஏராளமான ஆலோசனைகள் வழங்கியதாக கூறியுள்ளார். 

 “எனது அறிக்கைகள் அனைத்துமே அரசுக்கு ஆலோசனை சொல்லும் அறிக்கைகள்தான்.  அதை புரிந்து கொள்ளக் கூட அவரால் முடியலன்னு  இப்போத்தான் தெரியுது.” என்று ஸ்டாலின் குத்திக்காட்டியுள்ளார். 

கொரோனா மூன்று நாளில் ஒழிந்து விடும் என்றும், பணக்காரர்களுக்கு தான் கொரோனா வரும் என்றும் கூறிய முதலமைச்சர், இப்போது கொரோனா எப்போது ஒழியும் என்பது  ஆண்டவனுக்கே தெரியும் என கைவிரித்து விட்ட தாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

 சமூக பரவல் வந்துவிட்டதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளதை மறுக்கும் முதலமைச்சர், வார்த்தை விளையாட்டை நிறுத்த வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா பரவலை வெற்றிகரமாக எதிர்கொண்ட கேரளா, தாராவி பற்றி எடுத்துக் கூறியதாகவும் குறிப்பிட்ட ஸ்டாலின், தளர்வுக்கு மேல் தளர்வு என்று ஊரடங்கு சட்டத்தை கேலிக் கூத்தாகி விட்டதாகவும் விமர்சித்துள்ளார். 

 சென்னையில் வீடு தேடி சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்க கூறியும் அதை செய்யவில்லை என்றும், மறைக்கப்பட்ட 236 கொரோனா மரணங்கள் குறித்து விளக்கம் எங்கே எனக் கேட்டும் பதில் வரவில்லை என கூறியுள்ளார். 

எல்லா ஆலோசனைகளையும் கூறிவிட்டதாகவும், இப்போது அவருக்கு சொல்வதற்கு ஒரே ஒரு ஆலோசனை தான் இருக்கிறதென்றும், அது என்னவென்றால் - கொரோனாவை ஒழித்து விட்டு அதற்கான சாதனை பட்டத்தை சூட்டிக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

வீடியோ செய்திகள்