jeevan-works-logo
booked.net
தமிழக அரசின் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு... சென்னை மதுரைக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்..?

Published: Tuesday, Jun 30,2020 ,05:52:41am

தமிழகம் முழுவதும் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் ஜூலை 31 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. மேலும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு தொடரும் எனவும் அறிவிக்கப்படுகிறது. 

தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொது சுகாதாரத் துறையினர் உடன் ஆலோசனை நடத்தினார்.

 இதனையடுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி தமிழகம் முழுவதும் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுகிறது. சென்னையை பொருத்தவரையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஜூலை 5ஆம் தேதி வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு தொடரும் எனவும், அதற்குப் பின்னர் ஜூலை 6 முதல் 31ஆம் தேதி வரை சென்னையில் கடந்த 19ஆம் தேதிக்கு முன்பு இருந்த தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 இதேபோன்று மதுரை மாநகராட்சியில் ஜூலை ஐந்தாம் தேதி வரை முழு ஊரடங்கு தொடரும் என்றும், ஜூலை 6 முதல் 31ஆம் தேதி வரை இம்மாதம் 24-ஆம் தேதிக்கு முன்பு இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது.

 இதன்படி சென்னை மற்றும் மதுரை மாநகராட்சி தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் ஜூலை 31-ஆம் தேதி வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் உடனே ஊரடங்கு தொடரும். மேலும் ஜூலை மாதத்தில் உள்ள நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்தத் தளர்வுகளும் இன்றி தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

நகர்ப்புற வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் மறு உத்தரவு வரும் வரையில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி கல்லூரிகள்,  பயிற்சி நிறுவனங்கள் செயல்பட தடை நீடிக்கிறது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்கள் செல்ல மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை தொடர்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட விமானங்கள் தவிர சர்வதேச விமான போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில், மின்சார ரயில் சேவை, மாநிலங்களுக்கிடையிலான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கும் தடை நீடிக்கிறது.

 ஜூலை மாதம் 5, 12, 19 மற்றும் 26 ஆகிய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது, மாநிலத்தில் மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டிருக்கும் தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து, ஜூலை 1 முதல் 15ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. அந்தந்த மாவட்டத்திற்குள் இபாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. ஜூலை 31-ஆம் தேதி வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. 

 இரவு நேர ஊரடங்கு மட்டும் 9 மணிக்கு பதிலாக இரவு பத்து மணியிலிருந்து காலை 5 மணிவரை தொடர்வதாக உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது..

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 50 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 80 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து தனியார் நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப் படுகிறது. இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில், குளிர் சாதன வசதி  இயக்கப்படக் கூடாது.

உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. குளிர் சாதன வசதி இயக்கப்படக் கூடாது.

தேநீர் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப் படுகிறது.

தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, இயக்கலாம்.

ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். 

முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

மீன், இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள், சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப் படுகிறது.

வீடியோ செய்திகள்