jeevan-works-logo
booked.net
சாத்தான்குளம் வழக்கு சிபிஐ க்கு மாற்றம். இதுவரை சிபிஐ விசாரித்த தமிழக வழக்குகள் என்னென்ன..?

Published: Tuesday, Jun 30,2020 ,07:40:44am

சாத்தான்குளம் வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை சிபிஐ விசாரித்த வழக்குகளின் நிலை என்ன..? 

சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு மாற்றியதன் மூலம் முதலமைச்சர் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது. ஏற்கனவே சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திருக்காமல் நீதியை காத்திடுங்கள் என்று மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். 

சேகர் ரெட்டி வழக்கு : சேகர் ரெட்டி வீட்டில் இருந்து பணமதிப்பிழப்பு அறிவிப்பின் போது கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் உரிய ஆதாரம் இல்லை என சிபிஐ அவர் மீதான வழக்கை முடித்துக் கொண்டது.

 குட்கா ஊழல் வழக்கு : 2016ம் ஆண்டு குட்கா தயாரிப்பாளரான மாதவராவ் அவரின் வீடு மற்றும் குடோன் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி முக்கிய டைரி ஒன்றினை கைப்பற்றினர். அதில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. 

இந்த வழக்கில், சிபிஐ முதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது ஆனால் குற்றச்சாட்டுக்கு ஆளான முக்கியமானவர்களின் பெயர்கள் அதில் இடம் பெறவில்லை ஆனால் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

 ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கு :  ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.  நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கு விசாரணை சிபியை விசாரிக்க ஆரம்பித்து ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. 

ராமஜெயம் கொலை வழக்கு :  திருச்சி கே என் நேருவின் சகோதரர் ராமஜெயம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட போதும் விசாரணையில் முன்னேற்றமில்லை.

சென்னை ஐஐடி  மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்ட வழக்கு சிபிஐ வசம் தான் உள்ளது.  பழனி முருகன் கோவில் உற்சவர் சிலை முறைகேடு தொடர்பான வழக்கு சிபிஐ விசாரித்தது.  இந்த வழக்கில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

 ஆகவே சிபிஐ விசாரணை என்பது ஆகச்சிறந்த  வழி ஒன்றும் இல்லை.  முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் கூறியிருப்பது போல சிறப்பு புலனாய்வு குழு இந்த வழக்கை விசாரிப்பதும் கூட சரியானதாக இருக்கும்.

வீடியோ செய்திகள்