jeevan-works-logo
booked.net
ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின் சக்தி பூங்கா:: நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

Published: Saturday, Jul 11,2020 ,07:55:55am

ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின் சக்தி பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  அப்போது தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைய மின் தேவையில் தன்னிறைவு அடைவது  அவசியமானது என பிரதமர் தெரிவித்தார்.

மத்தியப்பிரதேசத்தில் உள்ள ரீவா நகரில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின் சக்தி பூங்காவை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

 அப்போது பேசிய பிரதமர் வளர்ச்சியில் புதிய உச்சத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருப்பதாகவும், தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைய மின் தேவையில் தன்னிறைவு அவசியமானது என்றும் தெரிவித்தார்.

 இந்தத் திட்டத்தின் மூலம் கார்பன் டை ஆக்சைடு குறையும் என்றும், சூரிய மின்சக்தி உறுதியானதாகவும், தூய்மையானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

 ஷாஜாபூர், நீமுச் மற்றும் சதர்பூர் பகுதிகளிலும் சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் கூறினார்.

மின்சக்தி பூங்காவில் 250 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மூன்று யூனிட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.  ஒட்டுமொத்தமாக 1500 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டு இருக்கும் பூங்காவில் ஒவ்வொரு யூனிட்டும் தலா 500 ஹெக்டேர் பரப்பளவு கொண்டிருக்கிறது.

 இந்த பூங்கா மத்திய பிரதேசத்தின் UVNL  மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (SECI)  ஆகியவை இணைந்து உருவாக்கிய கூட்டு நிறுவனமான ரேவா அல்ட்ரா மெகா சோலார் லிமிடெட் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

இந்த பூங்காவை அமைப்பதற்காக மத்தியஅரசு 138 கோடி ரூபாய் நிதி உதவி அளித்து இருக்கிறது. இந்த பூங்கா செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் ஆண்டுக்கு 15 லட்சம் டன் கரியமில வாயு வெளியேற்றம் தடுக்கப்படும். 

 இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் சூரிய சக்திக்கான கட்டணம் முதல் ஆண்டில் ஒரு யூனிட்டிற்கு 2 ரூபாய் 97 காசுகளாகவும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகளில் ஒரு யூனிட் கட்டணம் மூன்று ரூபாய் முப்பது பைசா இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

இந்த பூங்காவில் இருந்து  கிடைக்கும் மின்சக்தியில் 24 விழுக்காடு டெல்லி மெட்ரோ திட்டத்திற்கும் 70 விழுக்காடு மத்திய பிரதேச மாநில மின் பகிர்வு நிறுவனங்களுக்கும் வழங்கப்படும். 

வீடியோ செய்திகள்