jeevan-works-logo
booked.net
அமிதாப்பச்சன் குடும்பமே கொரோனாவால் பாதிக்கப்பட்டது... விரைவில் குணமடைவார்கள் என்று ரஜினி, கமல் நம்பிக்கை...

Published: Monday, Jul 13,2020 ,10:19:59am

கொரோனா தொற்று இப்போது வட இந்திய திரையுலகை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தி திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளக்கும் பச்சன் குடும்பத்தினருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் அவருடைய மகளுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 

ஹிந்தி திரையுலகில் உச்ச நட்சத்திரமான  77 வயதான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் 44 வயதான அபிஷேக் பச்சனுக்கும் சனிக்கிழமை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.  உடனடியாக இந்த தகவலை சமூக வலைதளங்களில் பதிவிட்டு,  இருவரும் தங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்கள்.

 அதனை தொடர்ந்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் தனித்தனி அறைகளில் இருவரும் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு லேசான அறிகுறி இருப்பதால் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அவர்களது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதால் உடல் நிலை குறித்து அடிக்கடி அறிக்கையை வெளியிட முடியாது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

தொடர்ந்து  அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகள் ஆராத்யா ஆகியோருக்கும் தொற்று உறுதியாகியிருக்கிறது.

 அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் உள்ளிட்ட மற்றவர்களுக்கு தொற்று இல்லை என மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்த நிலையில், அமிதாப் பச்சனின் வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டு இருக்கிறது.

 மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள ஹிந்தி நடிகை ரேகா வீட்டில் பாதுகாவலருக்கு தோற்று உறுதியாகி இருக்கிறது.  அந்த வீடும் சீல் வைக்கப்பட்டு நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.  நடிகர் அனுபம் கெரது  தாய், சகோதரர், சகோதரிகளின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சனை நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நலம் விசாரித்து இருக்கிறார். இருவருக்கும் வழங்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றியும் கேட்டறிந்துள்ளார்.

 மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் இந்திய மருத்துவர்கள் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், இருவரும் விரைவில் குணமடைவார்கள் என்றும் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

 இதேபோன்று இருவரும் விரைவில் குணமடைய அனுபம் கெர், மம்மூட்டி, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட நடிகர் நடிகைகள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

வீடியோ செய்திகள்