jeevan-works-logo
booked.net
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கைதான திமுக எம்எல்ஏ இதய வர்மன்..!! என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்..?!

Published: Monday, Jul 13,2020 ,10:27:29am

கோவில் நிலத்தை யார் பயன்படுத்துவது  என்பதில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.  

சென்னை துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் குமாருக்கும் அவரது சகோதரருக்கும் 350 ஏக்கர் நிலம் உள்ளது.

 செங்காடு கிராமத்தின் நடுவில் உள்ளே செல்லியம்மன் கோவிலை சுற்றி கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதன் அருகே திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதய வர்மன் தந்தை லக்ஷ்மிபதிக்கு சொந்தமான நிலமும் வீடும் உள்ளன.

 லக்ஷ்மிபதியும் குமாரும் தங்கள் நிலங்களுக்கு செல்ல கோவில் நிலத்தை பயன்படுத்தி வந்துள்ளனர்.  அதில் இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வருவாய்துறை அலுவலர் முன்பு பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

 இந்நிலையில் சனிக்கிழமை வரை அந்த பாதையின் ஒரு பகுதியை லக்ஷ்மிபதி ஆதரவாளர்கள் எந்திரம் வைத்து தோண்டி போட்டுள்ளனர். பொதுப் பாதையை தோண்ட கூடாது எனக்கூறி குமாரின் ஆட்கள் அந்த குழியை மூடிவிட்டனர்.

 இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டதால்,  குமார், சென்னையில் இருந்து 50 நபர்களை அழைத்துச் சென்று பாதை அமைக்கும் பணியை செய்துள்ளார். தகவலறிந்த லக்ஷ்மிபதி திமுக எம்எல்ஏ இதயவர்மனும் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று பாதை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதாகவும்,  அப்பொழுது அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த ரவுடிகளுக்கும் லக்ஷ்மிபதி தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 லக்ஷ்மிபதி உள்ளிட்ட சிலரை சென்னையைச் சேர்ந்த ரவுடிகள் அரிவாளால் வெட்டியதாகவும் அதனால் ஆத்திரமடைந்த திருப்போரூர் திமுக எம்எல்ஏவும் அவரது தந்தை இலஷ்மிபதியும் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் குமாரின் இனோவா கார் கண்ணாடி மற்றும் முன் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அப்போது அவ்வழியாக சென்ற சீனிவாசன் என்பவர் உடலில் குண்டு பாய்ந்து உள்ளது.

 ரத்த வெள்ளத்தில் விழுந்த சீனிவாசன் மீட்கப்பட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  காயமடைந்த குமார் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 தகவல் அறிந்து செங்கல்பட்டு டிஎஸ்பி கண்ணன் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை ஈடுபட்டார். அப்போது குமாரின் ஆதரவாளர்கள் அரிவாளால் வெட்டியதாகவும்,  தற்காப்பிற்காக குருவி சுடும் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதாக லட்சுமிபதி தெரிவித்தார்.

 இதையடுத்து கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சீனிவாசன் புகாரில் திமுக எம்எல்ஏ மீது  கொலை முயற்சி, சட்டவிரோதமாக துப்பாக்கியை பயன்படுத்தியது  உட்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

 அவரது தந்தை லக்ஷ்மிபதி மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  மேலும் கலவரத்தில் ஈடுபட்டதாக இரு தரப்பை சேர்ந்த 70 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். 

 பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ் பி கண்ணன் கலவரப் பகுதியில் இருந்து இரண்டு துப்பாக்கிகள், ஜேசிபி, டிராக்டர்,  4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிகள் இரண்டும் உரிமம் புதுப்பிக்க படாமல் இருந்தது விசாரணையில் தெரிய வந்ததாக கூறினார்.

 சீனிவாசன் தனக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்து விடுவார் என்பதால் அவரை எம்எல்ஏ தரப்பினர் கடத்தி வைத்துள்ளதாகவும் எஸ்பி தெரிவித்தார்.

 இதையடுத்து தலைமறைவாக இருந்த திமுக எம்எல்ஏ இதயவர்மன் தப்பிச்சென்ற கார் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.  பொதுப்பாதை விவகாரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் திருப்போரூர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

வீடியோ செய்திகள்