jeevan-works-logo
booked.net
சிறைத்துறை அதிகாரி கும்பகர்ணன் போல தூங்குகிறாரா? பேரறிவாளன் வழக்கில் நீதிபதி கேள்வி..!!

Published: Wednesday, Jul 29,2020 ,09:12:10pm

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து பன்னாட்டு விசாரணை குழு அறிக்கைக்கு பின் ஆளுநர் மாளிகை முடிவெடுக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று சிறைத் துறையினரிடம் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பேரறிவாளன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி கிருபாகரன் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.  இதுபோன்ற சூழலில் கூட தகுந்த உத்தரவு பிறப்பிக்காத  சிறை துறை அதிகாரிகளுக்கு ஏன் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கக்கூடாது நீதிபதி கேள்வி எழுப்பினார்.  சிறைத்துறை அதிகாரி உரியபடி கடமையாற்றினார் என்றால் மனுதாரர் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை என நீதிபதி தெரிவித்தார். 

சிறைத்துறை அதிகாரி கும்பகர்ணன் போல தூங்குகிறாரா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து தமிழக அரசு பல்நோக்கு விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கைக்காக  காத்திருப்பதால் இது குறித்து முடிவு எடுக்க  தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது. 

அந்த அறிக்கையின் அடிப்படையில் 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகை முடிவு செய்யும் எனவும் தமிழக அரசு குறிப்பிட்ட நிலையில் பேறறிவாளனுக்கு போதுமான மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,  இது குறித்து  பதிலளிக்க அவகாசம் வேண்டும் என கூறியதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமைக்குள் அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

வீடியோ செய்திகள்