jeevan-works-logo
booked.net
மருந்துக்கடை உரிமையாளரை மிரட்டி ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார்!! ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ரவுடியாம்..

Published: Friday, Jul 31,2020 ,10:59:20pm

சென்னையில் 50 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மருந்துக்கடை உரிமையாளரை மிரட்டி ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார்.  

ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி சிலம்பரசன்,  கடந்த 22ஆம் தேதிதான்  வெளிவந்தார்.  வெளியில் வந்த உடனேயே மீண்டும் மருந்து கடைக்காரரை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 

 ஏற்கனவே இவர் மீது  9 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார் இந்த ரவுடி.  சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில் மருந்து கடை நடத்தி வருபவர் வினோத்.  கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வினோத்திடம் 50 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு பிரபல ரவுடி சிலம்பரசன் மிரட்டல் விடுத்தார்.

இந்த விவகாரத்தை வினோத் மருந்தக சங்க நிர்வாகிகளிடம் கூறினார்.  அவர்கள் வழிகாட்டுதல்படி ஓட்டேரி காவல் நிலையத்தில் வினோத் புகார் அளித்தார்.  ரவுடி சிலம்பரசன் மருந்து கடை உரிமையாளரை மிரட்டிய ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவியது.

 வினோத் சார்ந்த சமூகத்தினரும் ரவுடிக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். மருந்தக  உரிமையாளர்கள் வினோத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.  பெருந்தொற்று காலகட்டத்தில் மருந்தக உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்தால்  சிக்கல் ஏற்படும் நிலை உருவானது.

 இதனால் சிலம்பரசனை உடனடியாக கைது செய்ய செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டார்.  கூடுவாஞ்சேரி காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ஓட்டேரி காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து சிலம்பரசனை உடனடியாக கைது செய்ய ஏற்பாடு செய்தார்.

 வியாழக்கிழமை தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் சிலம்பரசன் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அங்கு போலீசார் சென்றபோது ஆந்திரா தப்பிச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த சிலம்பரசனை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.  அவரிடமிருந்து 3 கைபேசிகள் மற்றும் கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது . புகார் அளித்த 48 மணிநேரத்திற்குள் பிரபல ரவுடியை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டியுள்ளார்.

வீடியோ செய்திகள்