அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று [05.08.2020] அன்று நடந்தது. 40 கிலோ வெள்ளியிலான செங்கல்லை, கருவறை அமையும் இடத்தில் வைத்து, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
பின்னர், 'ஜெய் ஸ்ரீராம்' என அயோத்தியில் தன் உரையை ஆரம்பித்த மோடி, ‘அயோத்தியில், இந்தியா, இன்று, ஒரு தங்க அத்தியாயத்தை உருவாக்கி இருக்கிறது. பல நுாற்றாண்டுகளின் காத்திருப்பு, இன்று முடிவுக்கு வந்திருக்கிறது. ராமர் கோவில், நம் பக்தியின் அடையாளமாக, நம் தேசிய உணர்வாக, இந்தியாவின் தேசிய கலாசாரத்தின் சின்னமாக திகழும்’ என்று கூறி இருக்கிறார்.
முன்னதாக, விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டில்லியிலிருந்து நேற்று காலை 9: 30 மணிக்கு சிறப்பு விமானத்தில் லக்னோ சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி சென்றார்.
பின்னர் ஹனுமன்கர்கி கோவிலுக்கு சென்ற பிரதமர் சிறப்பு வழிபாடு செய்தார். அங்கிருந்து ராமர் பிறந்த இடம் சென்று பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.
பின்னர், ராம ஜன்மபூமிக்கு சென்றார். பகல், 12:40 மணிக்கு, கோவில் கருவறை அமைய உள்ள இடத்தில், 40 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட செங்கல்லை வைத்து அடிக்கல் நாட்டினார்.
மேலும் அவர் பேசுகையில், “இன்று இந்தியா முழுதும், ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் தான் கேட்கிறது.சரயு நதிக்கரையில், வரலாற்று சிறப்பு மிக்க தருணம் நிறைவேறி உள்ளது. உலகம் முழுதும் உள்ள ராம பக்தர்களுக்கு வாழ்த்துகள்.இந்த நிகழ்ச்சி நமது நாட்டுக்கு மட்டுமல்ல. இந்த பூமிக்கே நல்ல ஆரம்பமாக அமையும். மனித இனத்துக்கு நன்மை பயக்கும் இந்த ஆரம்பம்” என்றார்.