jeevan-works-logo
booked.net
கோழிக்கோடு விமான விபத்து.. விமானியை குறைகூறிய விமானப் போக்குவரத்து இயக்ககத்தின் இயக்குநர்..!!

Published: Thursday, Aug 13,2020 ,07:46:08am

கோழிக்கோடு விமான விபத்து குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. விமானத்தை செலுத்தி வந்த விமானி, தவறான ஓடுதளமாக எண் 10யைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

விமான நிலையத்தின் கிழக்குப் பக்கம் உள்ள 28ம் எண் ஓடுதளம் தான் மோசமான வானிலை நிலவும்போதும் பயன்படுத்தப்படும். நிலையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் இந்த 28ம் எண் ஓடுதளத்தில் தரையிறக்கத் தான் உத்தரவிட்டுள்ளனர்.

 விமானியும் இதில் தரையிறக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மழை காரணமாக ஓடுதளம் சரியாகப் பார்வைக்குத் தெரியாததால் தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்ட விமானி மீண்டும் டேக் ஆஃப் செய்து பறந்துள்ளார் என்று வெளியாகியுள்ளன. 

இதையடுத்து, இரண்டாவது முயற்சியாக விமானியே தன்னிச்சையாகவும், அதீத தன்னம்பிக்கையினாலும் சுயமாக  முடிவெடுத்து 10ம் ஓடுதளத்தில் விமானத்தை  தரையிறக்கியுள்ளார்.  ஆனால், அவரால் விமானத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்கிறார்கள். 

 இந்நிலையில், விமானப் போக்குவரத்து இயக்ககத்தின் இயக்குநராக இருப்பவர், அருண்குமார்.  கோழிக்கோடு விமான விபத்துக் குறித்து தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அருண்குமார், அந்த விமானம் முறையாகத் தரையிறக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள விமானிகள் சங்கங்கள், அருண்குமாருக்கு விமானம் பற்றிய தொழில்நுட்பங்கள் தெரியவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளன. 

விமானப் போக்குவரத்து இயக்குநர் பொறுப்பில் இருந்து அருண் குமாரை நீக்கிவிட்டுத் தொழில்நுட்ப விவரங்கள் தெறிந்த வேறொருவரைப் பணியமர்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளன.

வீடியோ செய்திகள்