கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான அனுமதியை ரஷ்யா வழங்கி உள்ளது. இதுவே கொரோனாவுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்து என்றும், இதற்கு தேவையான அனைத்து பரிசோதனைகளும் முடிந்துவிட்டதாகவும் அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்திருக்கிறார்.
புதினின் மகளுக்கு ஏற்கனவே இந்த மருத்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வரும் அக்டோபரில் இருந்து இது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மனிதர்கள் மீது இந்த தடுப்பு மருந்தை பரிசோதித்து இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே இதற்கு ரஷ்ய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ரஷ்யா இவ்வளவு அவசரமாக இந்த தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து மருத்துவ வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி உருவாக்கும்போது சர்வதேச விதிமுறைகளை பின்பற்றுமாறு ரஷ்யாவிடம் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. அந்த தடுப்பூசி குறித்து மறுஆய்வு செய்ய ரஷ்ய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகின் பல நாடுகள் உருவாக்கியுள்ள கொரோனாவுக்கான தடுப்பு மருந்துகள் இன்னும் பரிசோதனை நிலையிலேயே உள்ளன. 100க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனைகள் ஆரம்பக்கட்ட நிலையில்தான் உள்ளன.
இவற்றில் ஒருசில தடுப்பூசிகள் மட்டுமே மனிதர்கள் மீதான சோதனை நிலையில் உள்ளது. 2021 மே மாதம் வரை கொரோனாவுக்கான எந்தத் தடுப்பூசியின் மக்கள் பயன்பாட்டுக்கு வராது என்பதே மருத்துவ வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.