பல ஆண்டுகளாக தமிழகத்தின் இரண்டாம் தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்த நிலையில் அவை நிராகரிக்கப்பட்டே வந்துள்ளன.
இந்நிலையில், அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்களே இப்போது மதுரையில் இரண்டாவது தலைநகரை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
வருவாய்த்துறை அமைச்சரான ஆர்.பி.உதயகுமார் இந்த கோரிக்கையை முன்வைக்க, சீனியர் அமைச்சர்களில் ஒருவரும் மதுரையைச் சேர்ந்தவருமான செல்லூர் கே.ராஜூவும் அதே கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறார்.
பாஜகவும் இந்தக் கோரிக்கையை ஆதரித்திருக்கிறது. அக்கட்சியின் பொன்.ராதாகிருஷ்ணன், மதுரையில் நிர்வாக நகரம் அமைய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். காங்கிரஸ் எம்.பி.யான மாணிக்கம் தாகூரும் இதை ஆதரித்திருக்கிறார்.
ஆனால் திமுக தரப்பில் இருந்து இன்னும் இது குறித்து அதிகாரப்பூர்வ நிலைப்பாடு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
எனவே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது குறித்து என்ன சொல்லப் போகிறார் என்று அனைவருமே கவனித்து வருகின்றனர்.