jeevan-works-logo
booked.net
சென்னை திரும்புபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு! தனிமையில் வைக்க சென்னை மாநகராட்சி திட்டம்!!

Published: Thursday, Aug 20,2020 ,07:00:20am

மாவட்டங்களுக்கிடையில் செல்வதற்கான இ - பாஸ் நடைமுறைகள் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் எளிமையாக்கப்பட்டு, போதிய விவரங்களுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது. நேற்று ஒரு நாளில் சென்னையில் 18,853 பேர் இ - பாஸிற்கு விண்ணப்பித்தனர். இதில் 18,823 பேருக்கு இ - பாஸ் வழங்கப்பட்டிருக்கிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 7, 8, 10, 11 மற்றும் 13 ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் குடிநீர் வழங்கல் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் கூடுதல் தலைமைச் செயலர் ஹர்மந்தர் சிங் தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தற்போது இ- பாஸ் நடைமுறை எளிதாக்கப்பட்டிருப்பதால், சென்னையை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

இம்மாதிரி பயண அனுமதி பெற்று வரும் நபர்களை கண்காணித்து தனிமைப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தொழிற்சாலை மற்றும் அலுவலகப் பணிகளுக்காக சென்னைக்குள் வரும் நபர்கள் குறித்த தகவல்களை மண்டல அலுவலர்கள் சேகரித்து அவர்கள் தனிமைப்படுத்தபடுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களில் வியாபார ரீதியாக வெளி மாவட்டங்களுக்கு சென்று வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதேபோன்று அம்பத்தூர் மண்டலம், கிண்டி தொழிற்பேட்டை அமைந்துள்ள அடையாறு மண்டலம் ஆகியவற்றில் தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால், வெளிமாநில தொழிலாளர்கள் வருகையும் அதிகரிக்கும். இதுதொடர்பான தகவல்களையும் சேகரித்து அவர்களையும் முறையாக தனிமைப்படுத்த வேண்டும்.

கரோனா வைரஸ் தொற்று பாதித்த பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் மாநகராட்சியின் வழிமுறைகளை பின்பற்றாத நபர்களின் மீதும், வெளியிடங்களுக்கு வரும் போது முகக்கவசம் அணியாதவர்கள் மீதும், சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களின் மீதும் காவல்துறை உதவியுடன் சட்டப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

என  நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமைச் செயலர் ஹர்மந்தர் சிங் உத்தரவிட்டிருக்கிறார்.

வீடியோ செய்திகள்