வரும் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. கொரோனாவால் ஏற்பட்டுவரும் பாதிப்புகளை கருத்தில்கொண்டு விநாயகர் சதுர்த்திக்கு சிலைகளை அமைத்து, ஊர்வலம் நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
பாஜக, இந்து முன்னணி போன்ற அமைப்புகள் இந்த தடையை நீக்கி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றன. இது தொடர்பாக பாஜக தலைவர் எல்.முருகன் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார்.
தடை உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடரப்பட்டது.
தமிழ்நாட்டில் ஒருநாளில் சுமார் 6000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவரும் இந்த சூழலில் எப்படி விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வழங்க முடியும்? இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து உயர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க கூடாது என்று நீதிமன்றம் கண்டித்தது.
இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாட கர்நாடக மாநில அரசு அனுமதி அளித்துள்ளதை குறிப்பிட்டு, பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சர்ச்சைக்குரிய ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது, "கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு" எனப் பதிவிடுள்ளார்.
என்றால், தமிழகத்தில் உள்ள அரசு என்ன அரசு என்று எச். ராஜா தெரிவிக்க விரும்புகிறார்?
மேலும் ஒரு பதிவில், “சென்னையிலும் நேற்றிலிருந்து டாஸ்மாக் திறக்கப்பட்டு விட்டது. இதனால் கொரோனா வராதாம். ஆனால் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து 5-10 பேர் சமூக இடைவெளியோடு விசர்ஜனம் செய்தால் கொரோனா வந்துடுமாம். பகுத்தறிவு. பகுத்தறிவு” என்றும் பதிவிட்டுள்ளார்.