jeevan-works-logo
booked.net
ஸ்விக்கி நிறுவனத்தின் ஊதிய குறைப்பு பிரச்சினைக்கு முதல்வர் உடனடி தீர்வு காண வேண்டும் மு க ஸ்டாலின் வேண்டுகோள்..

Published: Friday, Aug 21,2020 ,06:51:56am

ஸ்விக்கி உணவு டெலிவரி  நிறுவன ஊழியர்களின் ஊதியக்குறைப்புப் பிரச்சினைக்கு, முதல்வர் பழனிசாமி நேரடியாகத் தலையிட்டு, நிறுவனத்தை நேரில் அழைத்துப் பேசித் தாமதமின்றித் தீர்வு காணவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஊரடங்கு நேரத்திலும் ‘ஆன்லைன் ஆர்டர்’ மூலம் உணவை எடுத்துச் சென்று வழங்கி- வீட்டிற்குள் அடைபட்டிருக்கும் மக்களின் வயிற்றுப் பசியாற்றிய இந்த ஊழியர்களின் போராட்டத்தை 'ஸ்விக்கி' நிறுவனம் அமைதியாக வேடிக்கை பார்த்ததும் - 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களின் போராட்டத்தை அதிமுக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதும், மிகுந்த கண்டனத்திற்குரியது.

பேரிடரில் அனைவரின் வாழ்க்கைத் தரமும், வாழ்வாதாரமும் சூறையாடப்பட்டுள்ள சோகத்தை, திமுக சார்பில் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறேன், அதைத் தடுக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி வருகிறேன்.

ஒவ்வொரு தொழிலாளரின் உரிமையையும் பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பு- அதிலும் குறிப்பாகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சரின் பொறுப்பு என்பதைக் காலம் தாழ்த்தாமல் உணர்ந்திருக்க வேண்டும். “மாதம் 20 ஆயிரம் ரூபாய் பெறும் ஒரு ஸ்விக்கி உணவு விநியோக ஊழியர் 6 ஆயிரம் ரூபாய் கூடப் பெறமுடியவில்லை” என்று ஊழியர்கள் தெரிவித்த செய்திகள் அதிர்ச்சியளிப்பவையாக இருக்கின்றன.

ஆகவே, ஸ்விக்கி உணவு விநியோக ஊழியர்களின் போராட்டத்தை இதுவரை அலட்சியம் செய்தது போல் மேலும் தொடர்ந்து செய்யாமல் - அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுள்ள நிலையில், ஊழியர்களை உடனடியாக அழைத்துப் பேசி, ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று 'ஸ்விக்கி' நிறுவனத்திற்கு உத்தரவிடவேண்டும்.

அவ்வாறு அந்த நிறுவனம் கேட்கவில்லையென்றால் முதல்வரே நேரடியாகத் தலையிட்டு - ஊழியர்களையும், நிறுவனத்தையும் அழைத்துப் பேசி - ஊழியர்களின் ஊதியப் பிரச்சினைக்கு ஒரு சுமூகத் தீர்வு காண வேண்டும் என முதல்வர் பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன்”, என்று மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

வீடியோ செய்திகள்