jeevan-works-logo
booked.net
அடுக்குமாடி கட்டிடங்களும் இறப்பு சடங்குகளும்!

சென்னையில் ஹைரைஸ் அடுக்குமாடி கட்டிடங்களில் மக்கள் வாழும் நிலைமையை எழுதியிருக்கிறார்.. ஒரு நிமிடம் ஒதுக்கி படிக்கவும்:

எக்ஸ்பையரி டேட் இல்லாத ஓப்பன் விசாவிலே பூமிக்கு வர்றோம். நாமும் என்றோ ஒருநாள் திரும்பிப் போகப்போறோம்னு நினைச்சா மனிதாபிமானம் எல்லா இடங்களிலும் தழைக்கும். இந்த மனிதாபிமானது நம்ம நாட்ல மெல்ல மெல்ல செத்துக்கொண்டிருக்கின்றது.  

அந்த அடுக்குமாடிக்குடியிருப்பில் மொத்தம் 2613 ப்ளாட்டுகள். சென்னை பெங்களூர் பிரதான சாலையில் போரூரில் அமைந்துள்ளது அந்த அடுக்குமாடிக்கட்டிடம். 1 டவரில் 17 ஃப்ளோர்கள். 1 ஃப்ளோரில் 4 வீடுகள் 6 வீடுகள் என மொத்தம் 33 டவர்களில் இந்த 2613 ப்ளாட்டுகள் உள்ளது. ஏறத்தாழ கட்டிடம் முடிந்து முக்கால்வாசி ப்ளாட்டுகள் விற்று தீர்ந்து எட்டாயிரம் பேருக்கு மேல் இங்கே குடிவந்துவிட்டனர். எனது நெருங்கிய உறவினர் இந்த குடியிருப்பின் ஒரு டவரில் 7 வது மாடியில் ஒரு ப்ளாட் விலைக்கு வாங்கி வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் ஹார்ட் அட்டாக்கில் இறந்துபோனார். எல்லாருக்கும் தகவல் சொல்லி, வருகின்ற உறவினர்கள் உட்காருவதற்கும் மற்ற இறுதிச்சடங்கு பணிகளை செய்வதற்கும் ஆயத்தமான போது, அங்கே மெயின்ட்டெனன்ஸ் பண்ற நிர்வாக அலுவலகத்துல சாமியானா பந்தல் போட்டுக்கறோம்னு அனுமதி கேட்டபோது எதுவா இருந்தாலும் உங்க ப்ளாட்லயே வச்ச செஞ்சுக்கனும். எந்த இடத்திலும் சாமியானா பந்தல் போட அனுமதியில்லை. இங்கே உள்ள பொது இடத்தில் உடலை வைக்க அனுமதி இல்லை. மேளம், மணி, சங்கு இதெல்லாம் மற்றவர்களுக்கு உபத்திரவமாக இருக்கும். சோ அதெல்லாம் அவாய்ட் பண்ணிடுங்க. 

பாடியை கொண்டு வந்து வெளியிலே வச்சு கழுவறதெல்லாம் கூடாது. எல்லா சடங்குகளையும் வீட்டுக்குள்ளேயே முடிச்சுடுங்க. (அடேய் இறந்தவங்க உடலை பாத்ரூம்ல கொண்டுபோய் வச்சா கழுவ முடியும்?) இப்படி அடுக்கிக்கொண்டே போக உறவினர்களுக்கு அதிர்ச்சி. நல்லவேளை இத்தனை பேருக்கு மேல ப்ளாட்டுக்குள்ள வரக்கூடாது, வீட்டைத் தவிர அழற சத்தம் வெளியே கேக்கவோ, வெளியே வந்து பாடிக்கு முன்னால வந்து கும்பலா அழக்கூடாதுங்கிற கன்டிஷனோ போடலே. எப்படியோ எந்த சத்தமும் இல்லாமல் எல்லா சடங்குகளையும் வீட்டுக்குள்ளேயே செஞ்சுட்டு இறந்தவரை குளிப்பாட்டாமல் ஈரத்துணியால் உடல் முழுவதும் ஒத்தி எடுத்து உடலை கீழே இறக்கி இறுதி ஊர்வல வண்டியில் ஏற்றி மயானத்திற்கு கொண்டுபோனோம்.

அந்த அடுக்குமாடி குடியிருப்புல க்ளப் ஹவுஸ், ஆங்காங்கே பார்க்,சில்ட்ரன் ப்ளே ஏரியா, இன்டோர் கேம், அவுட்டோர் கேம், கம்யூனிட்டி ஹால், யோகா சென்டர், ஜிம், ஸ்விம்மிங்ஃபூல், லைப்ரரி, க்ரீச், பேட்மின்டன் கோர்ட், சூப்பர் மார்க்கெட், கார்பார்க்கிங், விசிட்டர்ஸ் கார்பார்க்கிங் என எல்லா வசதிகளும் உள்ளடக்கியது. எல்லா மதங்களும் எல்லா வகுப்பினரும் அங்கே குடியிருக்காங்க. இத்தனை வசதிகளும் அந்த ப்ளாட்டுகளை கோடிகளில் விலைகொடுத்து வாங்கி குடியிருக்கறவங்களுக்கு அவங்க கொடுத்த பணத்துக்கு செஞ்சுத்தர்ற வசதின்னு நினைச்சுக்கலாம். இந்த வசதிகள் அனைத்துமே பல பிரபல பில்டர்கள் கட்ற ஹைரைஸ் பில்டிங்க்ல எல்லா இடங்கள்லயும் டீஃபால்ட்டா இருக்கு. ஆனா எந்த ஹைரைஸ் டவர்லயும் அங்க குடியிருக்கற ஒருத்தர் இறந்து போனா அவங்களுக்குன்னு ஒரு க்ரீமேஷன் ஹால் அந்த காம்பவுன்ட்டுக்குள்ள  கண்டிப்பா இருக்கனும்னு ஒரு விதிமுறையை சிஎம்டிஏ விதிமுறைகள்ல கொண்டு வரலே. அதைக் கட்டாயம் கொண்டுவரனும். பில்டர்களுக்கும் இதுவரை அப்படி ஒரு யோசனை தோணலே. கோடிகள் கொடுத்து வாங்கி அங்கே இறந்து போனவரின் இறுதி மரியாதையைக்கூட அந்த இடத்தில் முழு திருப்தியாக செய்யமுடியலே. அங்கு பார்த்த காட்சிகள்  மிகவும் வேதனையாக இருந்தது. ஒரு மனுஷன் ப்ளாட்டை வாங்கி வாழற வரைக்கும் சந்தோஷங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கற பில்டர்களும் சிஎம்டிஏ வும் இப்படி அங்கே வாழ்ந்த ஒருவர் இறந்துபோனா அவரது இறுதிச் சடங்குகளை அவரவர்கள் முறைப்படி செய்துகொள்ள ஒரு ஹால் அந்த காம்பவுண்ட்டுக்குள் அமைத்துக்கொடுத்தால் என்ன? 

சிம்டிஏ அனுமதி வழங்கும் போது எஃப்.எஸ்.ஐ இவ்வளவு தான் இருக்கனும், ஒரு டவர்ல இத்தனை மாடிகளுக்கு மேல கட்டிடம் போகக்கூடாது, டீவியேஷன் இருக்கக்கூடாது, செட்பேக் இவ்வளவு இடைவெளி இருக்கனும்னு நிறைய கண்டிஷன்கள் போடுது. அதுல எத்தனை பில்டர்கள் சி.எம்.டி.ஏ போடற கண்டிஷனை ஏத்துகிட்டு அடுக்குமாடிகுடியிருப்புகள் கட்றாங்கன்னு பார்த்தா மேக்சிமம் விதிமீறலாத்தான் இருக்கும்.  இந்த ஹைவே 100 அடி அகலம் மட்டுமே கொண்டது.  இத்தனை மாடிகள் இத்தனை டவர்கள் இந்த இடத்தில் கட்ட சிஎம்டிஏ எப்படி அனுமதி கொடுத்தார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி. இத்தனை டவர்கள் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமையும் சாலையானது ஒரு 200 அடியாவது அகலம் இருக்கனும். 

ஏற்கெனவே இந்த ரோடு காலை மற்றும் மாலையில் விழிபிதுங்கும் டிராஃபிக். இந்த ரோடுல இந்த ஒரு ஹைரைஸ் பில்டிங் மட்டும் இல்லே. இதுபோன்று 500 மீட்டர் இடைவெளியில் பல கட்டிடங்கள். இப்படியான ஹைரைஸ் பில்டிங்க்ல ஒரு ப்ளாட்டோட விலை 3 பெட்ரூம்கள் கொண்டது 1.20 கோடியில் இருந்து 1,70 கோடிகள். இங்க இருக்கற அத்தனை பேரும் மேல்தட்டு மக்கள். கார்கள் வச்சிருக்காங்க. டூவீலர்கள் இருக்கு. எல்லாரும் இங்க இருந்து தங்கள் பணிகளுக்கும், மற்ற  வேலைகளுக்கும் வெளியே போய்ட்டு உள்ளே வரனும். 1000 பேர் இருக்கவேண்டிய இந்த இடத்திலே இப்போ 50 ஆயிரம் பேர். எவ்வளவு பெரிய நெருக்கடி.. இப்படி கட்டிடங்கள் மட்டுமே நிரம்பியுள்ள ஒரு பிரதான இடத்திலே இவ்வளவு பேருக்கும் தண்ணி வசதி செஞ்சுகொடுக்கனும். போர் எவ்வளவு ஆழத்துக்கு போடமுடியுமோ போட்டு எல்லா நிலத்தடி நீரையும் உறிஞ்சு எடுத்துட்டா, பக்கத்துல வயித்தை கட்டி வாயை கட்டி சின்னதா 20,30 வருஷத்துக்கு முன்னால வீட்டு மனைகள் வாங்கி அதுல வீடுகள் கட்டி 30 அடி தோண்டினாலே வத்தாம தண்ணீர் கிடைச்சு, வாழ்க்கையை நிம்மதியா ஓட்டிகிட்டு இருந்த அந்த ஏரியாவிலேயே இரண்டு மூன்று தலைமுறைகளா குடியிருந்தவங்களுக்கு இப்போ தண்ணீர் பஞ்சம் உருவாயிடுச்சு.

இப்படி ஹைரைஸ் டவர்ல கோடிகள் முதலீடு போட்டு ப்ளாட்டுகள் வாங்கறவங்க நிறைய விஷயங்களை பத்தி யோசிக்கறதே இல்லே. முதல்ல தண்ணீர் வசதி, இப்போ இருக்கற சூழல்கள் இத்தனை ஆயிரம் பேர்களுக்கு அந்த இடத்தில் தண்ணீர் தட்டுப்பாடின்றி தொடரந்து கிடைக்குமான்னு யோசிக்கறதே இல்லே. இரண்டாவதாக ட்ரெய்னேஜ் வசதி, எங்கயாச்சும் ப்ளாக் ஆச்சுன்னா அவ்வளவுதான்.  மூன்றாவதாக யு.டி.எஸ் என்று சொல்லப்படும் பிரிபடாத பாகம். (அதாவது கட்டிடம் ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு பின்னர் இடிக்கும் நிலை ஏற்படும் போது இந்த பிரிபடாத பாகம்தான் மதிப்பு) இதுபோன்ற  ஹைரைஸ் டவர்ல யு.டி.எஸ் 16 லேந்து அதிகபட்சமா 22 பர்சென்ட்தான் கொடுப்பாங்க. அதாவது 1500 சதுர அடிகொண்ட ப்ளாட்டோட யுடிஎஸ் எவ்வளவுன்னு பார்த்தா 230 சதுர அடியில் இருந்து 330 சதுர அடிதான் இருக்கும். நான்காவதா மெயின்ட்டெனன்ஸ். ஒரு சில டவர்கள்ல மெயின்ட்டனென்ஸ்க்கு கொடுக்கற பணத்துல ஒரு டபுள் பெட்ரூம் ப்ளாட் வாடகைக்கு எடுத்து குடியிருக்கலாம். 10 ஆயிரம் 12 ஆயிரம் என மாத மெயின்ட்டெனன்ஸ் வசூலிக்கும் கட்டிடங்களும் உண்டு. சமீபத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர்ப்பஞ்சத்தினால் இந்த மெயின்ட்டெனன்ஸ் இருமடங்கா உயர்ந்துபோச்சு. ஐந்தாவதா ஒரு விபத்தால இங்க இருக்கறவங்களுக்கு ஆபத்துன்னா தப்பிக்கறது ரொம்ப கஷ்டம்.

பொதுவா இரண்டு  ஃப்ளோர்கள் மட்டுமே கொண்ட கட்டிடங்களின் யு.டி.எஸ் குறைந்த பட்சம் 54 சதவீதம் இருக்கும். இதில் ப்ளாட் வாங்கறவங்களுக்கு  தான் கொடுத்த பணத்துக்கு ஒரு 30, 40 வருஷம் கழிச்சு கட்டிடம் பாழடைஞ்சு உடைக்கறப்போ ஒரு 35 சதவீதமாச்சும் திரும்ப கிடைக்கும். ஆனால் ஹைரைஸ் கட்டிடங்கள்ல கால்வாசிகூட தேறாது. இவ்வளவு ட்ராபேக் இருக்குன்னு தெரிஞ்சும் மேல்தட்டு மக்கள் ஏன் இதுபோன்ற கட்டிடங்கள்ல வங்கிகள்ல கடன் வாங்கி ப்ளாட் வாங்கறாங்க?

வெளிநாடுகள்ல இருக்கற இந்த ஹைரைஸ் கட்டிட கல்ச்சரை இந்தியாவில் கொண்டுவர என்ன காரணம், இந்த மாய வலையில் ஏன் மேல்தட்டு மக்கள் சிக்கி தங்களது பணத்தை இழக்கின்றார்கள் போன்ற விவரங்களை  இன்னொரு ஆர்ட்டிக்கள்ல விலாவரியா சொல்றேன்..


இவண்

இப்படிக்கு

முத்தான முகநூல் பதிவு