jeevan-works-logo
booked.net
தமிழ் சுவடிகள்: உண்மையும் நமது கடமையும் [பாகம் 1]

இன்று ‘சுவடிகள்’ என்று இணையத்தில் தேடினால் நாடி சோதிடம் குறித்த தகவல்களே காணக்கிடைக்கிறோம். என்ன ஒரு பரிதாபம்! ‘சுவடி’ என்ற சொல்லுக்கு இன்றைய தலைமுறை கொண்டிருக்கும் விளக்கம் வருத்தமளிக்கிறது. நாம் இன்று பெற்றிருக்கும் அனைத்து வகையான இலக்கிய, இலக்கண, மருத்துவ, சோதிட செல்வங்கள் அனைத்தும் ஒரு காலத்தில் சுவடி ரூபமாகவே இருந்தன. அச்சுத்துறை வளர்ந்த பிறகே இச்செல்வங்கள் அனைத்தும் புத்தக வடிவிற்கு மாறின. உ.வே. சாமிநாத ஐயர் மற்றும் சி.வை. தாமோதரம் பிள்ளை முதலான அறிஞர்கள் அழிந்துகொண்டிருந்த சுவடிச் செல்வங்களை இன்றைய தலைமுறைக்காக அரும்பாடுபட்டு  காப்பாற்றி அருளினர். இன்றும் புத்தகமாக மாற்றப்பெறாத – பதிப்பிக்கப்படாத சுவடிகள் ஏராளமாக உள்ளன. சுவடிகள் நம் அடையாளம். சுவடிகளுக்கும் ஆயுள் உண்டு. ஆயுள் முடிந்த சுவடிகள் அழிந்துபடுவதற்குள் அவற்றைக் காப்பாற்றியாக வேண்டும். சுவடிகளின் வரலாற்றை சற்றே திரும்பிப் பார்க்கலாமா!

ஆதிமனிதன் மொழியைத் தனதாக்கி எழுத்தைக் கண்டறிந்த காலத்திலிருந்தே, அவ்வெழுத்துக்களை நிலையாக எழுதிவைக்க நல்ல சாதனத்தைத் தேடித்திரிந்திருக்கிறான். பாறைகளில், களிமண் பலைகையில், மரப்பட்டையில், விலங்குகளின் தோலில் என்று அவனது தேடல் தொடர்ந்துகொண்டே இருந்தது. எகிப்தியர்கள் “பைப்பரஸ்” என்ற ஒருவகை கோரைப் புல்லில் எழுதினர். இந்த “பைப்பரஸ்” என்ற வார்த்தையிலிருந்துதான் ‘பேப்பர்’ மற்றும் “பைபிள்” என்ற சொற்கள் பிறந்தன. பனை மரங்களை வளமாகக் கொண்ட நம் நாட்டில் பனை ஓலைகளை நறுக்கி பதப்படுத்தி எழுதப் பயன்படுத்தினர்.

பனை ஓலைகள் தாராளமாகக் கிடைத்தாலும், அவற்றைப் பதப்படுத்தி எழுதப் பயன்படும் வகையில் ‘வெள்ளோலைகளாக’ மாற்றுவது சற்றே செலவு பிடிக்கும் காரியமாகவே இருந்துள்ளது. பனை மட்டைகளை வெட்டி, ஓலைகளாகப் பிரித்து, நரம்பு நீக்கி, அளவாக நறுக்கி, வேக வைத்து, மேலும் மண்ணில் புதைத்து வைத்து பதப்படுத்துவார்களாம். பின்னர் நங்கு உலர வைக்கப்பட்டு, வழவழப்பான சங்கு அல்லது கல் கொண்டு ஓலைகளை நன்கு தேய்ப்பார்கள். இத்தனை  படிநிலைகளுக்குப் பிறகும் சில ஓலைகள் பக்குவப்படாதிருக்குமாம். ஓலை பக்குவமாக இருக்கிறதா என்று எழுத ஆரம்பிக்கும் முன் அதில் ஒரு சுழி மற்றும் கோடு என்று கீறிப்பார்ப்பார்க்கும் வழக்கம் இருந்திருக்கிறது. இந்த பழக்கமே இப்பொழுதும் எழுத ஆரம்பிக்கும் முன் பிள்ளையார் சுழி இடும் மரபாக வளர்ந்து நிற்கிறது. தட்டச்சு செய்பவர்கள் கூட பிள்ளையார் சுழியோடுதான் ஆரம்பிக்கின்றனர்!

எழுத்தாணிகளும் தனித்தன்மை வாய்ந்தவையே! எழுதப் பழகும் ஆரம்ப நிலையிலிருப்பவர்களுக்கு ‘குண்டு எழுத்தாணி’ பயன்பட்டிருக்கிறது. இவ்வகை எழுத்தாணிகள் ஓலையை சேதப்படுத்தாமலும், பெரிய எழுத்துக்களாக எழுதவும் பயன்பட்டிருக்கிறது. நன்கு எழுதுபவர்களுக்கு வெட்டெழுத்தாணி, கூரெழுத்தாணி போன்றவை இருந்திருக்கின்றன. எழுதவும், மற்றும் ஓலையை சீராக்கவும் பயன்படும் வகையில் மடக்கு எழுத்தாணிகள் இருந்துள்ளன. இதன் ஒரு பக்கம் எழுத்தாணியாகவும், மறுபக்கம் கத்தியாகவும் இருக்கும். கத்தி பாகமானது மடக்கி வைத்துக்கொள்ளும்படி இருந்துள்ளது. இதைப் பின்பற்றியே மடக்கி வைத்துக்கொள்ளும்படியான கத்திகளுக்கு ‘பேனா கத்தி’ என்று பெயர் வந்துள்ளது.

மேலும் கீழும் மரச்சட்டங்களைச் சேர்த்து மெல்லிய கயிற்றால் கட்டி ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு மரச்சட்டங்களில் நம்மவர்கள் மிகுந்த வேலைப்பாடுகளைச் சேர்த்து இவ்வோலைச் சுவடிகளை அலங்கரித்துள்ளனர். விதவிதமான வடிவங்களிலும் ஓலைச்சுவடிகளை உருவாக்கியுள்ளனர். வட்ட வடிவம், லிங்க வடிவ ஓலைச்சுவடிகளெல்லாம் இருந்துள்ளன. இப்பொழுதும், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் ஏழாவது தளத்திலுள்ள சுவடிப் பிரிவில் இத்தகைய அபூர்வமான சுவடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சுவடிகளில் எழுதும் முறையும் நாம் வெகுவாக அறியாதது. இடது கைக் கட்டை விரல் நகத்தில் ஆங்கில எழுத்து ‘V’ போன்றதொரு வெட்டை உருவாக்கிக் கொண்டு, அதில் எழுத்தாணியின் முனையை பொருத்திக்கொண்டு வேகமாக எழுதும் வழக்கம் இருந்துள்ளது. சாதாரணமாக வலது கையில் முழுவதுமாக எழுத்தாணியைப் பற்றிக்கொண்டும் எழுதியிருக்கின்றனர். அளவான அழுத்தம், சரியான வேகம் இரண்டும் இருந்தால் மட்டுமே சுவடியில் எழுத்து முறையாக பதியும். பந்து முனைப் பேனா கொண்டு பர பரவென்று கிறுக்கித்தள்ளும் நமக்கு, இந்த எழுதும் முறை சற்றே ஆச்சரியத்தைத்தான் கொடுக்கிறது.

- தொடரும்


இவண்

இப்படிக்கு

நீலகண்டன் நாகராஜன்