சென்னை, மார்ச் 19-
பாராளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க.நேரடியாக களம் இறங்குகிறது.
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, மநீம உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
தேனி பாராளுமன்ற தொகுதியைப் பொறுத்தவரை கடந்த 1980ம-ம் ஆண்டு மறுசீரமைப்புக்கு முன்பு பெரியகுளம் தொகுதியாக இருந்தது. கடந்த 1980-ம ஆண்டு திமுக சார்பில் கம்பம் நடராஜன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் திடீரென இயற்கை மரணம் அடைந்ததால் 1983ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் கம்பம் ராமகிருஷ்ணனும் அதிமுக சார்பில் எஸ்.டி.கே ஜக்கையனும் போட்டியிட்டு, அதிமுக வெற்றி பெற்றது. 1985ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பில் அக்னிராசுவும், அதிமுக சார்பில் கம்பம் செல்வேந்திரனும் போட்டியிட்டனர்.இதில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பில் ஏ.கே.மகேந்திரன் போட்டியிட்டார். இதில், அதிமுக சார்பில் போட்டியிட்ட சேடப்பட்டி முத்தையா வெற்றி பெற்றார். 1991ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பில் கம்பம் ராமகிருஷ்ணனும், அதிமுக சார்பில் வக்கீல் ராமசாமியும் போட்டியிட்டதில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.1996ம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் ஞானகுருசாமியும், அதிமுக சார்பில் அப்போதைய சிட்டிங் எம்பியான வக்கீல் ராமசாமியும் போட்டியிட்டனர். இதில், திமுக வேட்பாளர் ஞானகுருசாமி வெற்றி பெற்றார். 1998ம் ஆண்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து, இரண்டு ஆண்டு காலத்தில் ஞானகுருசாமி பதவி இழந்தார். இதனை தொடர்ந்து 1998ம் ஆண்டு திமுக சார்பில் வேட்பாளர் காந்திமதியும், அதிமுக சார்பில் சேடப்பட்டி முத்தையாவும் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். 1999ம் ஆண்டு கம்பம் செல்வேந்திரன் திமுக சார்பிலும், டிடிவி தினகரன் அதிமுக சார்பிலும் போட்டியிட்டனர். இதில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். 2004ம் ஆண்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஜே.எம்.ஆரூணும், அதிமுக சார்பில் டிடிவி தினகரனும் போட்டியிட்டனர். இதில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றார்.
இதன் பின்னர் 2009ம் ஆண்டு தேர்தலில் மறுசீரமைப்பில் பெரியகுளம் பாராளுமன்ற தொகுதி, தேனி பாராளுமன்ற தொகுதியாக மாறியது. இதையடுத்து நடந்த முதல் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஜே.எம் ஆரூணும் அதிமுக சார்பில் தங்கதமிழ்செல்வனும் போட்டியிட்டனர். இதில், திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். 2014ம் ஆண்டு பொன்முத்துராமலிங்கம் திமுக சார்பில் போட்டியிட்டார். அதிமுக சார்பில் பார்த்திபன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே எஸ் இளங்கோவன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பெரியகுளம் மற்றும் மறுசீரமைப்புக்கு பிறகு உருவான தேனி பாராளுமன்ற தொகுதி வரலாற்றில் திமுக இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த இரண்டு முறையும் 5 ஆண்டு காலம் முழுமையாக பதவி வகிக்கவில்லை. தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வலிமையுடன் உள்ளதால் தற்போது தேனி தொகுதியில் போட்டியிடும் திமுக 10 ஆண்டிற்கு பிறகு வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
0 கருத்துகள்