அயோத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 22&ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஜனவரி 23&ந்தேதி முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
தினந்தோறும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் கோவிலில் தினந்தோறும் கூட்டம் அலை மோதி வருகிறது.
இந்த நிலையில் இன்று ஹோலி பண்டிகை விழா அயோத்தி ராமர் கோவிலில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு திரண்டு வண்ண பொடிகளை தூவியும், ஒருவர் மீது பூசியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கோவில் உள்ளேயும், அயாத்தியில் உள்ள தெருக்களிலும் ஹோலி பண்டிகை களை கட்டி இருந்தது.
ராமர் கோவில் திறக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் ஹோலி பண்டிகை இது என்பதால் அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுஇருந்தது. இதையொட்டி ராமர் கோவிலின் கருவறை வண்ண, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தது.பாலராமர் சிலையிலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் 56 வகை பிரசாதங்கள் சிலை முன்பு வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு, ஆராதனை நடைபெற்றது.
ஹோலி பண்கையை முன்னிட்டு அதிகாலை முதலே ராமர் கோவிலில் பக்தர்கள் குவிந்து இருந்தனர்.
ராமர் கோவில் திறக்கப்பட்ட பின்னர் நடைபெறும் மிகப்பெரிய விழா என்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஏராளமானோர் கோவில் முன்பு நடனமாடியபடி வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசியும் இனிப்புகள் வழங்கியும் ஹோலி பண்டிகை வாழ்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
0 கருத்துகள்