விஸ்வநாதரின் திருவிளையாடல்
ஒருநாள் கங்கையில் நீராடி விட்டு, காசிவிஸ்வநாதரையும் தரிசித்து விட்டு, சங்கரர் தம் சீடர்களுடன் வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது சிவபெருமான், ஆதிசங்கரரிடம் திருவிளையாடல் புரியத் தொடங்கினார். நான்கு வேதங்களையும், நான்கு நாய்களாக அழைத்துக் கொண்டு ஒரு சண்டாளன் (தீண்டத்தகாதவன்) உருவில் அவர் முன் தோன்றினார். அவரைப் பார்த்து சங்கரர், சண்டாளனே! விலகிப் போ என்றார்.
அதற்குச் சண்டாளன் சிரித்துக் கொண்டே, எதை விலகிப்போகச் சொல்கிறீர், இந்த சரீரத்தையா அல்லது அதன் உள்ளிருக்கும் ஆன்மாவையா. தாங்களோ எல்லோருக்கும் இரண்டும் வேறல்ல என்ற அத்வைதக் கொள்கையை போதித்து வருகிறீர்களே! வேற்றுமை இல்லாத உங்களுக்கு இப்போது எப்படி இந்த வித்தியாசம் தோன்றியது? என்று கட்டார்.
இதைக் கேட்ட சங்கரர் யார் இப்படி ஆத்மநிலையை அடைந்திருக்கிறாரோ அவர் சண்டாளனாயிருந்தாலும் சரி, பிராமணனாக இருந்தாலும் சரி, அவனே என் குரு என்ற பொருள்பட மனீஷா பஞ்சகம் என்று போற்றப்படும் 5 ஸ்லோகங்களைப் பாடி சாஷ்டாங்கமாக சண்டாளன் காலில் விழுந்தார்.
உடனே சண்டாளன் மறைந்துபோய், ஜடை, மகுடம், சந்திரன் முதலியவைகளை அணிந்திருந்த காசி விஸ்வநாதர் நான்கு வேதங்களுடன் அவருக்கு தரிசனம் கொடுத்தார்.
பின்னர் வியாசமுனிவரின் பிரம்ம சூத்திரங்களுக்கு விளக்கவுரை எழுதுக என்று கூறி விட்டு மறைந்தார்.
0 கருத்துகள்