Breaking News

6/recent/ticker-posts

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் தப்பிக்க நுங்கு, தர்பூசணி, இளநீர், மோர், வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிடுங்கள்


  சென்னை,மார்ச்18-


தமிழகத்தில் இனிவரும் நாட்களில் சராசரி  வெப்பநிலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயல்பைவிட வெப்பம் அதிகரிப்பதால், இந்தக் கோடையில் பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்ள நேரிடும். 

கோடை வெயிலால் அதிக வியர்வை வெளியேறும்போது உப்புச் சத்துப் பற்றாக்குறையும், நீர்ச்சத்துப் பற்றாக்குறையும் ஏற்படுகின்றன. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்படலாம்.


வெயிலின் தாக்கத்தால் வேர்க்குரு, அரிப்பு, தேமல், மணல்வாரி அம்மை, வயிற்றுப் பிரச்சினை போன்றவை ஏற்படும். தண்ணீரை அதிகம் குடிக்காதவர்களுக்குச் சிறுநீரகக் கல் வரக் கூடும். உச்சி வெயிலில் விளையாடும் குழந்தைகளுக்கு வலிப்பு வருவதற்கு சாத்தியம் உள்ளது

பச்சிளம் குழந்தை கள், சிறு வயதுக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் ஆகியோர் அதிக அளவு பாதிப்படையச் சாத்தியம் உள்ளது.

கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்களை தடுக்க அதிக அளவு நீர் பருக வேண்டும்: தாகம் இல்லை என்றாலும், தினமும் குறைந்தது 5 முதல் 7 லிட்டர்வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.



சிறுநீரானது வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும் அளவில் தேவையான அளவு நீர் பருக வேண்டும். சூடான பானங்கள் பருகுவதைத் தவிர்க்க வேண்டும். அதிக அளவில் மோர், உப்பும் மோரும் கலந்த அரிசிக் கஞ்சி, இளநீர், உப்பு கலந்த எலுமிச்சைப் பழச்சாறு, ORS உப்புக் கரைசல் ஆகியவற்றைப் பருக வேண்டும்.

வெளியே செல்லும்போது: பயணத்தின்போது குடிநீர் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஆடை உடுத்தும் முறை: வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடையை அணிய வேண்டும். திறந்தவெளியில் வேலை செய்யும்போது தலையில் பருத்தித் துண்டு ,துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும்.

வீடுகளில் குளிர்ந்த காற்றோட்டம்: சூரிய ஒளி நேரடியாகப் படும் ஜன்னல், கதவுகள் ஆகியவற்றைத் திரைச்சீலைகளால் மூட வேண்டும். இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வருமாறு ஜன்னல்களைத் திறந்து வைத்துக்கொள்ளலாம். தினமும் காலை, மாலை அல்லது இரவில் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.



சூரிய வெப்பம் அதிகமாக உள்ள திறந்தவெளியில் வேலை செய்யும்போது களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக வெப்பம் அதிகமுள்ள இடத்திலிருந்து வெப்பம் குறைவான குளிர்ந்த இடத்துக்குச் செல்ல வேண்டும். மேலும், தண்ணீர் ,எலுமிச்சைப் பழச்சாறு ,ORS கரைசல் பருக வேண்டும்.

மேலும் நுங்கு, தர்பூசணி, இளநீர், மோர், வெள்ளரிக்காய் போன்றவற்றைத் தவறாமல் உட்கொள்வது நல்லது. உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆட்டு இறைச்சி, மீன் ஆகியவற்றை அளவோடு சாப்பிடலாம். பதப்படுத்தப்பட்ட உணவு, கோழி இறைச்சி, கருவாடு போன்றவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.


 


கருத்துரையிடுக

1 கருத்துகள்