Breaking News

6/recent/ticker-posts

கர்நாடகாவில் திக்...திக்... ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 18 மணிநேரத்திற்கு பிறகு உயிருடன்மீட்பு


 கர்நாடக மாநிலம் விஜயாபுரம் மாவட்டம் லசயான் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் முஜகொண்டா-பூஜா தம்பதியின் 2 வயது மகன் சாத்விக். இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் அருகில் உள்ள தனது நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டினர்.ஆனால் 30 அடி வரை தோண்டியும் தண்ணீர் வராததால் ஆழ்துளை கிணற்றை மூடாமல் அப்படியே விட்டு விட்டனர். 

இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் குழந்தை சாத்விக் மூடப்படாத ஆழ்துளை கிணற்றின் அருகே விளையாடினான். அப்போது திடீரென அவன் கிணற்றுக்குள் தவறி விழுந்தான். சிறிது நேரத்தில் மகன் சாத்விக் மாயமானதால் பதறிய பெற்றோர் தேடியபோது அவன் ஆழ்துறை கிணற்றுக்குள் தவறி விழுந்து இருப்பது தெரிந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அந்த பகுதியில் முகாமிட்டு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் தலைகீழாக சிக்கி இருந்ததால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் துளையில் பாறையும் அதிகமா இருந்தது. இதைத்தொடர்ந்து அதன் அருகிலேயே ஜே.சி.பி.எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பணி இரவு, பகலாக நடைபெற்றது.

 சம்பவ இடத்தில் மருத்துவகுழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர். நேற்றுமாலை 6மணிக்கு தொடங்கி மீட்பு பணி வேகமாக நடைபெற்றது. குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படக்கூடாது என்பதால் சிறிய பிளாஸ்டிக் டியூப் மூலம் ஆக்சிஜன் ஆழ்துளை கிணற்றுக்குள் செலுத்தப்பட்டது. மேலும் குழந்தையின் நடவடிக்கையை காமிரா மூலம் வீடியோவில் கண்காணித்தனர். இதைத்தொடர்ந்து 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இன்று மதியம் 12 மணியளவில் குழந்தை சாத்விக்கை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். 

இதனால் அங்கிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சியில் கூச்சலிட்டனர். பின்னர் குழந்தையை ஆம்புலன்சு மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தற்போது குழந்தை நலமாக உள்ளது. குழந்தையை பத்திரமாக உயிருடன் மீட்ட மீட்பு குழுவினரை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டினர். குழந்தையை பத்திரமாக மீட்கவேண்டும் என்று காலை முதலே கர்நாடகாவில் பல பகுதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்