சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று இரவு சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்றபோது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஏ.சி. பெட்டியில் பயணம் செய்த பா.ஜனதா பிரமுகர் சதீஷ் உள்பட 3 பேர் கட்டு கட்டாக ரூ.4 கோடி ரொக்கத்துடன் சிக்கினர்.
அவர்கள் திருநெல்வேலி தொகுதி பா.ஜனதா வேட்பாளரான நயினார் நாகேந்திரனின் சென்னையில் உள்ள ஓட்டல் ஊழியர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நயினார் நாகேந்திரன் தொடர்புடைய பணம் என்று தெரிவித்ததாக தெரிகிறது.இதனால் ரூ.4 கோடியும் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட இருந்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் இது தொடர்பாக நெல்லை பாரதிய ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறும் போது, ரெயிலில் பிடிபட்ட ரூ. 4 கோடிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யாரிடமோ பிடிபட்ட பணத்திற்கு நான் எப்படி விளக்கம் கூற முடியும். அவர்கள் தங்களது தேவைக்காக பணம் கொண்டு சென்று இருக்கலாம். இதற்கு விளக்கம் கூறி எனது பணம் இல்லை என்று கூற வேண்டிய அவசியம் இல்லை. திருநெல்வேலி தொகுதியில் பா.ஜனதாவின் வெற்றி பிரகாசமாக உள்ளது.
எனவே தி.மு.க. இதுபோன்று நாடகம் ஆடுகிறது. தேர்தலை திசைதிருப்ப தி.மு.க. முயற்சி செய்கிறது.தேர்தல் கமிஷனில் இருந்து இதுவரை என்னிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை .தேவைப்பட்டால் விளக்கம் அளிப்பேன் என்றார்.
இதற்கிடையே ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தமிழக தலைமை தேர்தல் கமிஷனரிடம் புகார் மனு ஒன்று அளித்தார்.
அதில் நயினார் நாகேந்திரன் தொடர்புடைய இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்த வேண்டும். மேலும் பா.ஜனதா வேட்பாளர்கள் அனைவரது தொடர்புடைய இடங்களிலும் சோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
இந்தநிலையில் நெல்லையில் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர் ஒருவரது வீட்டில் இன்று நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில் ரூ.2 லட்சம் ரொக்கம், 100 வேஷ்டிகள், 44 நைட்டிகள், மதுபானங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்