தமிழில் பல படங்களில் துணை நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்து பிரபலமான நடிகர் விஸ்வேஷ்வர ராவ்(வயது62). சிறுசேரியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று அதிகாலை வீட்டில் இருந்த போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஸ்வேஷ்வர ராவ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விஸ்வேஷ்வரராவுக்கு கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பு இருந்தது. இதற்காக ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்து உள்ளார்.இந்த நிலையில் அவர் உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டு இறந்து உள்ளார்.
விக்ரம் சூர்யா நடிப்பில் வெளியான ‘பிதாமகன்’ படத்தில் லைலாவின் தந்தை கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு பேசும்படி இருந்தது. இதேபோல் உன்னைநினைத்து படத்தில் லாட்டரி சீட்டு வாங்கி ஏமாற்றத்துடன் அரிவாளுடன் ஜோசியரான நடிகர் சார்லியை தேடும் காமெடியும் ரசிக்கும் படி இருந்தது.
இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணசித்ர நடிகராகவும் நடித்துள்ளார்.
இதேபோல் குழந்தை நட்சத்திரமாகவும் 150 படங்களுக்கும் மேல் நடித்து இருக்கிறார்.வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். இதுவரை சுமார் 350 படங்களுக்கும் மேல் விஸ்வேஷ்வர ராவ் நடித்துள்ள சினிமா துறைக்கு சேவை செய்து உள்ளார். அவரது திடீர் மறைவு சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஸ்வேஷ்வர ராவ்வின் உடல் நாளை தகனம் செய்யப்பட உள்ளது. சிறுசேரியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு உள்ளது.
0 கருத்துகள்