ராம நவமி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி பாலராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளியால் திலகமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளியை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர். அப்போது ராமர் சிலைக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. இதனை பிரதமர் மோடி தனது விமான பயணத்தின் போது ஆன்லைன் மூலம் டேப்லெட்டில் பார்த்தார். அந்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்.
அதில் அயோத்தியில் பாலராமர் சிலையின் மீது சூரிய திலகம் விழும் அற்புதமான மற்றும் தனித்துவமான தருணத்தைக் காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. ஸ்ரீ ராம் ஜென்மபூமியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தருணம் அனைவருக்கும் பரவசமான தருணம். இந்த சூரிய திலகம் வளர்ந்த இந்தியாவின் ஒவ்வொரு தீர்மானத்தையும், அதன் தெய்வீக ஆற்றலால் ஒளிரச் செய்யும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
கோவிலின் 3-வது மாடியில் இருந்து உயர் தர லென்ஸ் மற்றும் தொழில் நுட்பத்துடன் பித்தளையால் ஆன குழாய் தரைதளத்தில் உள்ள கருவறை வரை பொருத்தப்பட்டு சூரிய ஒளி கொண்டு வரப்பட்டு உள்ளது.
லென்சில்ல் படும் சூரிய ஒளி, குழாயில் உள்ள தொடர் பிரதிபலிப்பான்கள் மூலம் கருவறைக்கு திசை திருப்பப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் அங்குள்ள ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் நிகழச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்