Breaking News

6/recent/ticker-posts

பா.ஜனதா தேர்தல் பிரசாரத்தில் நடிகை குஷ்பு திடீர் விலகல்- நட்டாவுக்கு கடிதம்


தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. பாரதிய ஜனதா, நாம் தமிழர் கட்சி, அ.தி.மு.க.,தி.மு.க.என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

 தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகை குஷ்பூ தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் அவர் திடீரென தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகி உள்ளார்.இது தொடர்பாக அவர் பா.ஐனதா தேசிய தலைவர் நட்டாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

 கடந்த 2019-ம் ஆண்டு டில்லியில் நடந்த விபத்தில் முதுகின் கீழ்பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது.டாக்டர்களின் ஆலோசனை படி தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் குணமடைய வில்லை.

இந்த  சூழலில் தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் அறிவுரையை மீறி வலி வேதனையுடன் முடிந்த அளவுக்கு பிரசாரம் செய்தேன்.ஆனால், உடல்நிலை மோசமாகி விட்டது. தேர்தல் பிரச்சாரத்தில்,நீண்ட பயணம்,நீண்ட நேரம் நிற்பது தவிர்க்க முடியாது.

டாக்டர்களின் ஆலோசனையை மீறி செயல்பட்டால் பாதிப்பு ஏற்படும் என்பதால் தேர்தல் பிரசாரத்தில் என்னால் பங்கேற்க முடியாது என்பதை மன வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த நேரத்தில் கட்சிக்கு பங்களிப்பு செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது. 

எனினும் எனது சமூக வலைதள பக்கங்கள் மூலம் முடிந்த அளவுக்கு பா.ஜனதாவின் கொள்கை, செயல் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பேன்.மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்பதை காண ஆவலுடன் காத்து இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்